நீதித்துறையில் வெளி நபர்கள் தலையீடு இருக்கக் கூடாது: மதுரை உயர்நீதி மன்றம்

சென்னை:

நீதித்துறையில் வெளிநபர்கள் தலையீடு இருக்கக் கூடாது என்று நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் வந்தது தொடர்பான வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தமிழக சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கு அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு விசாரித்து  ஜூன் மாதம் 14ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் முடிவு செல்லும் என்று கூறியிருந்தார். ஆனால், மற்றொரு நீதிபதியான சுந்தர் அளித்துள்ள தீர்ப்பில், சபாநாயகர் தீர்ப்பு செல்லாது என்று அறிவித்திருந்தார்.

இதைத்தொர்ந்து வழக்கு 3வது நீதிபதியான சத்தியநாராயணாவின் விசாரணைக்கு மாற்றப்பட்டு மீண்டும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு கூறிய நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் வந்ததாக தகவல் வெளியானது. இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதித்துறையில் வெளிநபர்கள் தலையீடு இருக்கக் கூடாது என்றும், நீதிபதிகளுக்கு ஆபத்து வரும்பட்சத்தில் நாங்களே பார்த்துக் கொள்வோம் என்று கருத்து தெரிவித்து உள்ளனர்.