ததும்பி வழியும் மேட்டூர் அணை… கரைபுரண்டு ஓடும் காவிரி….! குடிநீர் பிரச்சினையை தீர்க்குமா?

மேட்டூர் அணை

டந்த பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பி வழிகிறது. அணை நிரம்பி .. ததும்பி  கடல்போல காட்சி அளிக்கிறது. பாசனத்திற்கான தண்ணீரும் காவிரியில் கரைபுரண்டு ஓடுகிறது….

காவிரியில் பயன்பெறும்  விவசாய பெருமக்கள் மட்டுமல்லாது காவிரி நீரால் குடிநீர் பெற்று வரும் கிராம மக்களும் மகிழ்ச்சியில் திளைத்து உள்ளனர். ஆனால், இந்த நீரை அரசு மட்டும ல்லாது பொதுமக்களும் வீணாக்காமல் உபயோகப்படுத்தினால்… இந்த ஆண்டு அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாட எழ வாய்ப்பில்லை என்றும், டெல்டா பாசன போகங்களில்  இரண்டு போகம் பயிர் விளையும் வாய்ப்பு இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

காவிரி நீரை தேக்கி வைக்கும் மேட்டூர் அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையை நம்பித்தான் டெல்டா பாசனம் நடைபெற்று வருகிறது. கடந்த,5 ஆண்டுக்கு பிறகு தற்போது வருணபகவானின் தாராளம் காரணமாக , காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கர்நாடக அணைகளும் நிரம்பின. அதைத்தொடர்ந்து,  அணை களில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூரை நோக்கி ஓடிவந்து அணையில் சங்கமித்து, தற்போது டெல்டா பாசனத்திற்காகவும் காவிரி கரையோர ஊர்கள் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

கடல் போல காட்சியளிக்கும் மேட்டூர் அணை

காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் விவசாயம் சாகுபடி நடந்து வரும் டெல்டா மாவட்டங்கள்   தவிர  ராமநாதபுரம் , கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, வேலூர், ராமநாதபுரம், ஒகேனக்கல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளின் குடிநீர் தேவையையும் தீர்த்து வருகிறது.

இதற்காக பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் நூற்றுக் கணக்கான பஞ்சாயத்துக்குகளுக்கும் காவிரிக் கரையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதுபோல,  கொள்ளிடம் ஆற்றை நம்பியும்  50-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பொதுவாக நாள் ஒன்றுக்கு 1500 மில்லியன் லிட்டர் குடிநீருக்காக சப்ளை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது  காவிரியில் தண்ணீர் அதிகளவு செல்வதால் மேலும் நீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கூறும் அந்த பகுதி குடிநீர்வாரிய அதிகாரிகள்,  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிகபட்சமாக 1800 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டதாக கூறுகின்றனர். அதன்பிறகு தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக குடிநீரின் அளவு குறைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு குடிநீர் அதிகளவு விநியோகம் செய்யப்படும். அதேவேளையில் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் ஈரப்பதம் காரணமாக நிலத்தடி நீர் மட்டமும் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக இந்த ஆண்டு 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

அதுபோல காவிரிபாய்ந்தோடும்  தருமபுரி, சேலம், நாமக்கல், குமாரபாளையம், பள்ளிபாளை யம், பரமத்தி வேலூர், மோகனூர் வழியாக காவிரி ஆறு பாய்ந்து செல்கிறது. இந்த பகுதியில் காவிரி பாசனத்தை பிரதானமாகக் கொண்டு பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிரம்பி ததும்பும்  மேட்டூர் அணை

அதேபோல், குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி ஆற்றில் நாமக்கல் – மோகனூர் கூட்டுக் குடிநீர் திட்டம், ராசிபுரம் – பட்டணம் பேரூராட்சி கூட்டுக் குடிநீர் திட்டம் போன்றவை செயல்படுத்தப் பட்டு வருகின்றன. இந்த பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக காவிரி நீர் வராததால், ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு காவிரி கரைபுரண்டு ஓடுவதால், இந்த பகுதிகளிலும் தண்ணீர் பிரச்சினை தீர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பல ஆண்டுகளாக காவிரி தண்ணீரை காணாத பல பகுதிகளுக்கு தற்போது காவிரி சென்றடைந்து உள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள அந்த பகுதி மக்கள் காவிரி தாயை மலர்தூவி வரவேற்று, பயிர் நடவுகளை தொடங்கி வருகின்றனர்.