சென்னை,

ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டன் வீடு, கொள்ளையர்கள் வாழ்ந்த இடம், அதை புனித ஸ்தலம் என்று நம்புவதற்கு தமிழர்கள் மடையர்களா? என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்  காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ.குற்றவாளி என்று கூறப்பட்ட நிலையில், அவருடன் இருந்த சசிகலா குடும்பத்தினர் ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டதாக பல்வேறு புகார்கள் வெளியாகி உள்ள நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இவிகேஎஸ் இளங்கோவன் ஜெயலலிதா இல்லம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.

சென்னை அருகே போரூரில்,  இந்திராகாந்தி நூற்றாண்டு விழாவும், நாசே தொண்டு நிறுவனத்தின் இலவச பயிற்சி பெற்ற வர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன், பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

ஒரு கொள்ளை கூட்டம் அடித்த கொள்ளையை கண்டுபிடிக்க வருமான வரி சோதனை நடக்கிறது. ஆனால், போயஸ் கார்டனை கோவில் என்றும், புனித ஸ்தலம் என்றும் சொல்கிறார்கள். ஆனால் தற்போது,  அந்த கோவிலின் மூல விக்ரகம்  இல்லை.

அந்த கோவிலில்  இப்போதுதான் சோதனை நடக்கிறதா? ஏற்கனவே 1991-ல் சோதனை நடத்தினார்கள். அப்போது 10 ஆயிரம் பட்டுப்புடவைகள், 3 ஆயிரம் ஜோடி செருப்புகள், கோடிக்கணக்கில் வைரம் இன்னும் என்னவெல்லாமோ கைப்பறினார்கள் என்று கூறினார்.

புனிதமான பொற்கோவிலை தீவிரவாதிகள் புகலிடமாக வைத்து இருந்ததால் இந்திரா காந்தி அவர்களை சுட்டுத் தள்ளினார். ஆனால்,  போயஸ் கார்டன் என்ன அப்படிப்பட்ட புனித இடமா?  கொள்ளையர்கள்களின் கூடாரமாகத்தானே இருந்தது. அதை கோவில் என்றும், புனித இடம் என்றும் சொல்வதை நம்புவதற்கு தமிழர்கள் மடையர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

இங்கு நடக்கும் சூழ்நிலையை பார்த்தால் தமிழன் என்று வெளியே சொல்லவே அவமானமாக இருக்கிறது. தலைவி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் இந்திரா காந்தி. தன்னை பற்றியும், உறவினர்களை பற்றியும் நினைக்காத பரம்பரை நேரு பரம்பரை.

செயலில் புரட்சி செய்த தலைவர்கள் மத்தியில் கொள்ளையடிப்பதுதான் புரட்சி என்று வாழ்ந்தார்கள். அதனால்தான் மழை  பெய்ய வில்லை. தற்போது  கெட்டவர்கள் அழிந்தால் தான் மழை பெய்யும் என்பார்கள். அதனால் தான் இப்போது மழை பெய்து கொண்டி ருக்கிறது என்று கூறினார்.

தமிழக மந்திரிகள் கோமாளிகள் போல் செயல்படுகிறார்கள். அம்மா இட்லி தின்றார். சட்னி தொட்டு சாப்பிட்டார். என்று, அன்று நாங்கள் சொன்னது பொய். இது என் பிள்ளை மீது சத்தியம் என்கிறார் ஒரு மந்திரி.

இன்னொரு மந்திரி ஆற்றில் கலந்த கழிவு நீர் நுரை சோப்பு போட்டு குளித்ததால் வந்தது என்கிறார்.

மந்திரிகளாக இருப்பவர்களுக்கு சராசரி மனிதர்களை விட கொஞ்சமாவது கூடுதலாக அறிவு வேண்டும். ஆனால் இவர்களுக்கு அது கிடையாது. ஒருவரை ஒருவர் ஜெயிலுக்கு யார் முதலில் போகப்போகிறோம் என்பதுகுறிதே பேசி வருகிறார்கள்.

இவர்கள் மாமியார் வீட்டுக்குத்தான் போவார்கள்போல தெரிகிறது. சொந்த வீட்டுக்கு செல்லும் அருகதை யாருக்கும்  இல்லை போலும்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக  இவ்வளவு பெரிய சோதனை நடைபெற்றுள்ளது. ஆனால், அதுகுறித்து  தினகரன் முகத்தில் வருத்தம் தெரிகிறதா? என்று தொண்டர்களை பார்த்து கூறினார்.

மேலும்,  நான் திருடன்தான். என்ன செய்ய முடியும். 20 வருடம் ஜெயிலுக்கு சென்றாலும் செல்வேன். வெளியே வந்து பார்த்து கொள்கிறேன் என்று அகங்காரமாக கூறினார் ஒருவர்.

தற்போது இங்கேதான் மடையர்கள் இருக்கிறார்கள் என்று பார்த்தால் மேலேயும் மடையர்கள்தான் இருக்கிறார்கள் என்புதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களை இந்திய கடலோர காவல்படை சுட்டதை ஒத்துக்கொண்டது. ஆனால் பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் சுட்டது யார் என்று தெரியவில்லை என்கிறார். ஆட்சியில் இருப்பவர்கள் இப்படி இருந்தால் நாட்டின் நிலைமை என்ன ஆகும். மத்திய, மாநில அரசுகள் தூக்கி எறியப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.