சென்னை:

மிழகத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துள்ளது. இதற்கு பொதுமக்கள், மற்றும் வியாபாரிகள் தரப்பில் வரவேற்பு உள்ள நிலையில் பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும விதத்தில் கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் தங்களுடன் துணி பைகளை எடுத்துச்செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதே வேளையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்களின் வியாபாரும் சூடுபிடித்து வருகிறது.

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் ஏற்கனவே பிளாஸ்டிக் தடை குறித்து அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல்  14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு பல விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வந்தது.சென்னை பெருநகராட்சி சார்பில் பாரிமுனை, தி.நகர் போன்ற முக்கிய வணிக நிறுவனங்கள் செயல்படும் பகுதிகளில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்து பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புவை ஏற்படுத்தினார். அதுபோல வணிக நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை  பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் விளக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பைகள், சணல் பைகள் போன்ற பொருட்கள் உற்பத்தி மற்றும் வணிகமும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. திருப்பூர் பகுதியில்  துணிப்பைகள் தயாரிப்பில் உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அரசின் பிளாஸ்டிக் தடை அறிவிப்புக்குப் பிறகு மூடிக்கிடந்த பல துணிப்பை உற்பத்தி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

அதுபோல நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீண்டும் ஓலையினால் முனையப்பட்ட பெட்டிகள் உள்பட பல வகையான பொருட்கள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு, தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த, ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்தெந்த பொருட்களுக்கு அந்த தடை என்பது பற்றி பெரும்பாலானோர் சந்தேகமாக கேள்வி எழுப்பிவருகின்றனர். அதனை பற்றிய செய்தி…

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விவரம்

➤உணவகங்களில், உணவுப் பொருட்களை கட்டுவதற்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்கால் ஆன தெர்மாகோல் தட்டுகள் மற்றும் குவளைகளை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.

➤உள்பக்கம் பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், தண்ணீர் குடிக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குவளைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

➤மேலும், தண்ணீர் பாக்கெட்டுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள்,  உணவை பார்சல் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொட்டலங்கள், கடைகளில் பொருட்கள் வாங்கும்போது இலவச இணைப்பாக தரப்படும் பிளாஸ்டிக் தூக்கு பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

➤இதேபோன்று பிளாஸ்டிக் கொடிகளையும் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் விரிப்புகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுக்களை உபயோகப்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

➤டீக்கடைகளில் தரப்படும் பிளாஸ்டிக் தேநீர் குவளைகள்,இளநீர், குளிர்பானங்களை உறிஞ்சிக் குடிக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உறிஞ்சுக் குழல்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் பொதுமக்களும் தற்போது மாறி வருகின்றனர்.  கடைகளுக்கு செல்லும்போது துணிப்பைகளை எடுத்துச் செல்கின்றனர்.

வணிக நிறுவனங்களிலும் தற்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக  ‘எளிதில் மக்கக்கூடிய கைப்பைகள், துணிப்பைகள், சணல் பைகள், பாக்குமட்டை தட்டுகள், பேப்பர் குவளைகள், பேப்பர் உறிஞ்சுகுழல், மரக்கட்டையிலான ஸ்பூண்கள் போன்றவற்றை மட்டுமே விற்பனை செய்யும் கடைகளாக மாற்றி உள்ளனர்.

இதேபோன்று கொடிகள் விற்பனை செய்யப்படும் கடைகளில் பிளாஸ்டிக் கொடிகளுக்கு பதிலாக பேப்பரினால் ஆன கொடிகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன.