தாங்கள் எடுக்கும் உறுதிமொழியை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பின்பற்றுவது இல்லை!: ஆடிட்டர் குரூமூர்த்தியின் அடுத்த அதிரடி

சென்னை: 

தாங்கள் எடுக்கும் உறுதிமொழியை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பின்பற்றுவது இல்லை என்று : ஆடிட்டர் குரூமூர்த்தி அதிரடியாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

சட்டப்படிப்பை முடித்த சுமார் 450 மாணவர்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் நேற்று வழக்கறிஞர்களாக பதிவு செய்தனர். இவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கும் நிகழ்ச்சி பார் கவுன்சில் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு துக்ளக் இதழின் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி தலைமை தாங்கினார்.

சமீபத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக சில அ.தி.மு.க. வழக்கறிஞர்கள்  கருப்பு கொடி காட்டி போராட்டம் செய்ய உள்ளதாக தகவல் பரவியதால் பரபரப்பான சூழல் நிலவியது.  பார் கவுன்சில் அலுவலகத்தை சுற்றி ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதாவது:–

“வழக்கறிஞராக பதவி ஏற்கும்போது, நீங்கள் வாசித்த உறுதிமொழி கையேட்டை பத்திரமாக வைத்திருந்து அதை தினமும் படிக்க வேண்டும். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள் பதவி ஏற்கும்போது ஏற்கும் உறுதிமொழியை தீவிரமாக பின்பற்றுவதில்லை. வக்கீல்கள் தொழிலின் மாண்பை மனதில் பதியவைக்கும் விதமாக இந்த உறுதிமொழிகளை தினமும் படியுங்கள்.

நீதிமன்றத்துக்கு வழக்கறிஞர்கள் உரிய மரியாதை அளிக்க வேண்டும். இல்லையென்றால், பொதுமக்கள் நீதிமன்றத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை குலைந்துவிடும். எல்லா இடங்களிலும் கெட்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். எனவே, நல்ல வழக்கறிஞர்களை தேடிச்சென்று நீங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

வழக்கறிஞர்கள் தினமும் சட்டத்தையும், உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் தீர்ப்புகளையும் படிக்க வேண்டும். இதை செய்தால் தான் சட்ட அறிவு பெருகும். வழக்கறிஞர்  தொழில் மட்டும் தான் வாழ்நாள் முழுவதும் சட்டத்தை படித்துக்கொண்டே இருக்க வேண்டிய தொழிலாகும்” என்று குருமூர்த்தி பேசினார்.