சென்னை:

மைச்சர் வேலுமணியின் உத்தரவின் பேரில், பத்திரிகையாளர் அன்பு என்பவர் கடத்தப்பட்டதாக கூறி, டிஜிபி அலுவலகத்தில் அமர்ந்து செய்தியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சென்னை பத்திரிகையாளர் சங்கத்தலைவரும், உள்ளாட்சி அலசல் ஆசிரியருமான வி. அன்பழகன் என்பவர், சென்னை பூந்தமல்லி மல்லியம் நரசிம்ம நகரில் வசித்து வருகிறார்.

இன்று காலை லுங்கி கட்டிக்கொண்டு, அருகில் இருக்கும் தனது தாயாரின் வீட்டுக்குச் சென்றவரை காணவில்லை. அவரது அலைபேசி எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கிறது.

இதனால் பதறிய அவரது குடும்பத்தார் அவரை தேடி பல இடங்களிலும் தொடர்புகொண்டனர்.

வேலுமணி

இந்த நிலையில், வி.அன்பழகன் தனது “உள்ளாட்சி அலசல்” இதழில், தமிழக அமைச்சர் வேலுமணியை விமர்சித்து கட்டுரை வெளியிட்டதாகவும், இதையடுத்து வேலுமணியின்  உத்தரவின் பேரில் அவரது உதவியாளர் பார்த்திபன் தூண்டுதலில்  கோவை ஆலந்துறை காவல் நிலைய போலீசார், அன்பழகன் மீது வழக்கு பதிந்ததாகவும், வீட்டை வி்ட்டு வெளியே வந்த அன்பழனகனை கடத்திச் சென்று விமானம் மூலம் கோவைக்கு கொண்டு சென்றிருப்பதாகவும் தகவல் பரவியது.

இதழில் வெளியான செய்தியில் உடன்பாடில்லை என்றால் நீதி மன்றத்தை நாடலாம், அல்லது காவல்துறையில் புகார் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க முனையலாம்.

அதைவிடுத்து கடத்தல்காரர்கள் போல பத்திரிகையாளரை கடத்துவதும் அவர் குறித்த தகவல்களை காவல்துறையினர் மறைப்பது முறையல்ல என்ற கருத்தும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், அன்பழகன் கைது தொடர்பாக டிஜிபியை சந்திக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களை சந்திக்க டிஜிபி மறுக்கவே,     டிஜிபி அலுவலகத்திலேயே பத்திரிக்கையாளர்கள் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே 26.04.2017 இரவு 10 மணியளவில் கோவை ஐே. எம் 5 மாஜிஸ்திரேட் முன்பாக அன்பழகனை போலீசார் ஆஜர்படுத்தினர்.