வேலியே பயிரை மேய்கிறது: ரூ.7500க்கு தனது தபால் வாக்கை அரசியல் கட்சியினரிடம் விற்பனை செய்த போலீஸ்காரர்…!

திசையன்விளை:

நாடு முழுவதும் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்றும், மக்கள் பணம், பரிசு பொருட்கள் பெறாமல் நேர்மையான முறையில் தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோடிக்கணக்கில் செலவு செய்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல்துறையினரே தங்களது வாக்குகளை விலை பேசி விற்கும் அவல நிலை தமிழகத்தில் நடந்தேறி உள்ளது. பொதுமக்கள்தான் வாக்குக்கு பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டு வந்த நிலையில், தற்போது காவலர்களே அதுபோன்ற ஒரு சூழ்நிலைக்கு மாறியிருப்பது வெட்கக்கேடானது.

தமிழகத்தில் வரும் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தேர்தல் பணிகளுக்கு செல்லும் காவல் துறையினர், தங்களது வாக்குகளை செலுத்தும் வகையில் அவர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த வாக்கை,  நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்தவர் அந்தோணி சேகர் என்ற போலீஸ்காரர், அந்த பகுதியை சேர்ந்த  திமுக பிரமுகர்  ஜெயராஜ் என்பவரிடம்  ரூ.7,500 பேரம் பேசி விற்பனை செய்துள்ளார். இதையறிந்த தேர்தல் பறக்கும் படையினர் தபால் வாக்கை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட காவலர்மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்நிலையில் புகார் கொடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து  தபால் வாக்கை விற்பனை செய்த குற்றத்திற்காக அந்தோணி சேகர் மீது பிரதிநிதித்துவ மக்கள் சட்டத்தின் கீழ் திசையன்விளை காவல் நிலையத்தில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தபால் ஓட்டை விற்பனை செய்த போலீஸ்காரர் அந்தோணி சேகர்  திசையன்விளை அருகே உள்ள உவரி காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.

இவர்மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணை முடிவை தொடர்ந்தே அவர்மீதுஎன்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து தெரிய வரும் என்று அதிகாரிகள் கூறினர்.

வேலியே பயிரை மேய்வது போல, பணம் வாங்காமல் வாக்களிப்பதை கண்காணிக்கும் காவல் துறையினரே தனது வாக்கை விற்பனை செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.