சென்னை:  ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளான 7பேர் விடுதலை விவகாரத்தில்  தமிழ்க காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு திமுக பதில் தெரிவித்து உள்ளது.  கொள்கை வேறு; கூட்டணி வேறு என கூறியுள்ளது.

ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க வேண்டுமென திமுக உள்பட தமிழக அரசியல் கட்சிகள் குரல்கொடுத்து வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி மட்டும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையடுத்து இன்று  கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில்,  7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக் கொள்வோம். ஆனால், அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல. கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர, அவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல. கொலை குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்தால் தமிழகத்தில் காவல் நிலையங்கள் வேண்டாம், நீதிமன்றங்கள் வேண்டாம், சட்டம் ஒழுங்கைப் பற்றி பேச வேண்டாம் என்பது பொருளாகும். எனவே, முன்னாள் பிரதமரை படுகொலை செய்து, இந்தியாவிற்கு கேடு விளைவித்த குற்றவாளிகளுக்கு பரிந்து பேசுவது தமிழர் பண்பாடு ஆகாது என தெரிவித்திருந்தார்.

கே.எஸ்.அழகிரியின் அறிக்கையைத் தொடர்ந்து கூட்டணி கட்சியான திமுக பதில் தெரிவித்து உள்ளது.  இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி,   7 பேரை விடுவிக்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று கூறியவர், கூட்டணி வேறு, கொள்கை வேறு, கூட்டணியில் இருப்பதால், காங்கிரஸ் சொல்லும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார்.