சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் முறைகேடுகளை தடுக்க  வாக்குப் பதிவை நேரலையாக ஒளிபரப்ப உத்தரவிடக் கோரி திமுக வேட்பாளர் மருதுகணேஷ் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

ஜெ.மறைவை தொடர்ந்து காலியாக உள்ள ஆர்கே.நகர் தொகுதிக்கு இரண்டாவது முறையாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது.

வரும் 21ந்தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் காரணமாக ஆர்.கே.நகர் தொகுதியில் இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக 148 புகார்கள் வந்துள்ள தாகவும், 15 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இதுவரை ரூ.5 லட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபாய் அளவிலான பணமும்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  ஆர்.கே.நகர் முழுவதும் துணை ராணுவ பாதுகாப்பில் தேர்தல் நடைபெறும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், இதுவரை 2 கம்பெனி துணை ராணுவப்படைகள் மட்டுமே வந்துள்ளனர்.

தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 8 அதிகாரிகளும் தொகுதி முழுவதும் சுற்றி வந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி முழுவதும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுவரை 284 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ஆர்.கே நகரில் பாதுகாப்புக்கு துணை ராணுவத்தை கூடுதலாக அமர்த்தவும்,  ஆர்.கே நகரில் அனைத்து தெருக்களிலும் கேமரா பொறுத்தக்கோரியும் கூறி உள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க  திமுக கோரியது. ஆனால், மனுவை வரும் திங்கட்கிழமை விசாரிக்கப்படும் என  நீதிபதிகள் சிவஞானம், ரவிச்சந்திரபாபு ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.