கேரளா லாட்டரியில் ஏழை விதவைக்கு ரூ.10 கோடி பம்பர் பரிசு

கேரளாவில் அரசு சார்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட பம்பர் லாட்டரியில் ஏழை விதவைப் பெண்ணுக்கு 10 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

kerala

கேரளாவில் லாட்டரிச் சீட்டு சட்டபூர்வமாக நடந்து வருகிறது. அங்கு அரசு சார்பிலும் லாட்டரிச் சீட்டு நடத்தப்படுகிறது. கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள அரசு நிதி திரட்டுவதற்கும் சிறப்பு லாட்டரியைச் சீட்டுகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், கேரள அரசு சார்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு லாட்டரியில் பம்பர் பரிசாக ரூ.10 கோடி அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த லாட்டரி விற்பனை பரபரப்பாக நடைபெற்றது.
இதற்கான குலுக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த குலுக்கலில் கேரள மந்திரிகள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குலுக்கல் முடிந்து நேற்று முடிவு அறிவிக்கப்பட்டது. இதில், சிறப்பு பம்பர் பரிசான ரூ.10 கோடி 56 வயதான வல்ஸலா என்ற ஏழை விதவைப் பெண்ணுக்கு கிடைத்துள்ளது. வல்ஸலா திருச்சூர் அருகே உள்ள சித்தலப்பிலி பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அரசின் வரிகள் போக அவருக்கு 6 கோடியே 34 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.