இலங்கையில் தொடரும் குழப்பம்: ரணில் மீண்டும் பிரதமராக பதவி ஏற்பாரா?

கொழும்பு:

லங்கையில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு குழப்பம், இன்னும் நீடித்து வருகிறது. இலங்கை உச்சநீதி மன்றம் அதிபர் சிறிசேனாவின் உத்தரவு செல்லாது என அறிவித்துள்ள நிலையில், பிரதமர் ராஜபக்சே இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து, பிரதமராக ரணில் விக்கிரமசிங்க  மீண்டும் பதவியேற்றுக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவரை பிரதமராக நியமிக்க மாட்டேன் என்று அதிபர் சிறிசேனா மீண்டும் முரண்டு பிடித்து வருகிறார். இந்த நிலையில் சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது.

இலங்கை பிரதமருக்கும் அதிபரும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு உச்சக்கட்டத்தை தொடர்ந்த நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிரடியாக  நீக்கிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா, கடந்த அக்டோபர் 26ம் தேதி நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சேவை நியமித்து பதவி ஏற்பு விழாவையும் நடத்தினார்.

ஆனால், ராஜபக்சேவால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க முடியாத நிலையில்,  அதிபரின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இலங்கை உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு ராஜபக்சே பிரதமராக செயல்பட இடைக்கால தடை விதித்தது. மேலும் அதிபர் சிறிசேனாவின் உத்தரவையும் ரத்து செய்த நீதிபதிகள், அதிபர் சிறிசேனாவின் உத்தரவு அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் தெரிவித்தனர்.

இதன் காரணமாக சிறிசேனாவால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்சே இன்று ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதைத்தொடர்ந்து,. இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நாளை மறுநாள் காலை 10 மணிக்கு மீண்டும் பதவியேற்றுக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் நியமிக்கப்போவதில்லை என அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்னும் குழப்பம் நீடித்து வருகிறது.