புதுடெல்லி:

வரும் மே 18-ம் தேதியுடன் 17-வது மக்களவை தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வருகின்றன. அடுத்து யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது மே 23-ம் தேதி மாலை தெரிந்துவிடும்.


அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, தனிப்பட்ட கட்சியோ அல்லது கூட்டணி கட்சிகளோ சேர்ந்து ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது.

எனினும், தொங்கு நாடாளுமன்றம் ஏற்படும் நிலையும் உள்ளது. இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. இதுபோன்று ஏற்கெனவே தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.

அதேசமயம், எந்த கட்சியும் அரிதிப் பெரும்பான்மை பெறாவிட்டால், குடியரசுத் தலைவர் யாரை ஆட்சியமைக்க அழைப்பார்? தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியா? அல்லது தேர்தலுக்கு முந்தைய கூட்டணியா? தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி ஆட்சியா? என பல கேள்விகள் எழும். இந்த எல்லா கேள்விகளுக்கும் முன்னுதாரணங்கள் உள்ளன.
இந்த நேரத்தில் குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவு அரசியல் சாசனத்துக்கு உட்பட்டதாக அமைய வேண்டும்.

அமைச்சரவை குழுவுக்கு அவையில் கூட்டுப் பொறுப்பு இருப்பதாக அரசியல் சாசனத்தின் 75-வது பிரிவு கூறுகிறது.

பிரதமரை குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும் எனவும், அமைச்சர்களை பிரதமரின் ஆலோசனையின்பேரில் குடியரசுத் தலைவர் நியமிப்பார்.

பிரதமரை நியமிக்கும் முன்பு, அவருக்கு எத்துனை உறுப்பினர்கள் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டியது குடியரசுத் தலைவரின் கடமை.

அரிதிப் பெரும்பான்மை பெறாதவர்களை ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் அழைக்க முடியாது.
பெரும்பான்மை இல்லாதவர்களை ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் அழைத்தால், நம்பிக்கை தீர்மானம் கொண்டுவந்து, மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.