காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டங்கள் தொடரும்: மு.க.ஸ்டாலின்

கடலூர்:

காவிரி உரிமை மீட்பு நடைபயணத்தை மேற்கொண்ட திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை திமுகவின் போராட்டங்கள் ஓயாது என  கூறினார்.

உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 7ந்தேதி திருச்சி முக்கொம்பில் காவிரி உரிமை மீட்பு நடை பயணத்தை மேற்கொண்டார்.

கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த இந்த நடை பயணம், திருச்சி, தஞ்சாவூர் வழியாக வந்து நேற்று கடலூரில் நிறைவு பெற்றது.

இந்த போராட்டத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்களான காங்கிரஸ் தலைவர் திருநாவுக் கரசர், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் வீரமணி, கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள், விவசாய சங்கத்தினர் உள்பட ஏராளமானோர்  கலந்துகொண்டனர்.

திருச்சியில் தொடங்கிய காவிரி உரிமை மீட்பு பயணத்தை நேற்று  கடலூரில் நிறைவு செய்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, காவிரிக்காக பயணம் செல்கிறேன் என்று கூறியதும் கருணாநிதி கையைத் தூக்கி வாழ்த்து தெரிவித்தார் என்று நெகிழ்ச்சியுடன் கூறிய ஸ்டாலின், தனது காவிரி உரிமை மீட்பு பயணம் இன்று  நிறை வடைந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை போராட்டங்கள் தொடரும் என்று கூறினார்.

காவிரி குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும்  ஏற்படுத்தவே நடைபயணம் மேற்கொண்டதாகவும், காவிரி பிரச்சினையில் மத்திய மாநில அரசுகள் தமிழகத்துக்கு துரோகம் செய்துவருவதாகவும் கடுமையாக சாடினார்.

காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சி தலைவர்களை சந்திக்க  சந்திக்க நேரம் ஒதுக்காத பிரதமரை, சென்னை வந்தபோது முதல்வர் எடப்பாடி வரவேற்க சென்றது என் என்றும், அதற்கு  எப்படி மனது வந்தது என்றும் கேள்வி எழுப்பினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி அரசு அழுத்தம் தரவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும், தமிழர்களின்  கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திற்கு பயந்து பிரதமர் மோடி ஆகாயத்தில் பறந்து சென்றாலும், தேர்தல் சமயத்தில்  பிரதமர் மோடி கீழே இறங்கி வந்துதான் ஆக வேண்டும் என்ற ஸ்டாலின் இதுபோல ஏற்கனவே பல  முன்னாள் பிரதமர்களுக்கு எதிராகவும் கருப்புக் கொடிகள் காட்டப்பட்டன.. ஆனால் அவர்கள் யாரும்   விமானத்தில் பறந்து செல்லவில்லை என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின்,  பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் கடலூரில் இருந்து சென்னை வரையிலான வாகனப் பேரணி ரத்து செய்யப்படுவதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து , திமுக தலைமையகத்தில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி கவர்னர் பன்வாரிலாலை சந்தித்து மனு கொடுக்க இருப்பதாகவும்  கூறினார்.