கலப்பு திருமண ஜோடிகளிடம் அதிகாரிகள் கெடுபிடி காட்டக் கூடாது….உயர்நீதிமன்றம்

சண்டிகர்:
‘‘கலப்பு திருமணங்கள் செய்வோரிடம் அதிக கெடுபிடி காட்டக் கூடாது’3 என்று அரசு அதிகாரிகளுக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் குருகிராம் மற்றும் பரிதாபாதை சேர்ந்த இஸ்லாமிய ஆணும், இந்து பெண்ணும் மதம் மாறாமல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். கலப்பு திருமண பதிவு சட்டப்படி இவர்களின் பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

‘‘பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்பக் கூடாது. அவர்கள் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அதோடு இந்த விஷயம் பத்திரிக்கைகளில் வெளிவரக் கூடாது’’ என்று மாவட்ட திருமணப் பதிவு அதிகாரிக்கு உத்தரவிடக் கோரி பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்றத்தில் இந்த ஜோடி மனு தாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதி நரைன் ரெய்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில்,‘‘மதசார்பற்ற நாட்டில் கலப்பு திருமணம் என்பதை ஊக்குவிக்க வேண்டும். இந்த மாற்றம் அனைவரது மனதிலும் பிரதிபலிக்க வேண்டும். கலப்பு திருமண ஜோடிகளை பார்த்து அதிகாரிகள் புருவத்தை உயர்த்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது.

ஹரியானா அரசின் நீதிமன்ற திருமண பரிசோதனை பட்டியலில் ஜோடிகளின் தனிப்பட்ட உரிமை மீறப்பட்டுள்ளது. அதனால் இதை மாற்றி அமைப்பதோடு, எளிமைபடுத்த வேண்டும். இந்த ஜோடி அளித்துள்ள வீட்டு முகவரியை, அவர்களது சுய ஒப்புதலாக ஏற்றுக் கொள்ள வேண்டும். திருமண அதிகாரி அலுவலக அறிவிப்பு பலகையில் இந்த திருமணம் குறித்த அறிவிப்பை பதிவு செய்யும் 30 நாட்களுக்கு முன்பு வெளியிட்டு கொள்ளலாம் ’’ என்றார்.