சென்னை,

டகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் கடந்த 4 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை தண்ணீரில் தத்தளித்து வருகிறது.

இலங்கை அருகே வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களி லும்,   வடகடலோர மாவட்டங்களிலும் மேலும் இரண்டு நாள் மழை நீடிக்கும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக சென்னையில் பகலில் மிதமான மழையும், இரவு கனமழையும் பெய்து வருகிறது. நேற்று பகல் நேரத்தில் சிறிது நேரம்  வெயில் எட்டிப் பார்த்த நிலையில் பிற்பகல் முதல் மீண்டும் மழை தொடர்ந்தது. பின்னர் இரவு  கனமழை பெய்தது.

சென்னையில், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, குரோம்பேட்டை, பல்லாவரம், மெரீனா, போரூர், நுங்கம்பாக்கம், அசோக்நகர், பிராட்வே, வில்லிவாக்கம், கூடுவாஞ்சேரி, குன்றத்தூர், பெரம்பூர் போன்ற பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

அதேபோன்று, திருவாரூர், திருவள்ளூர், நாகை ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது.   திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பேரளம், கூத்தாநல்லூர், நன்னிலம், குடவாசலில் கனமழை பெய்துவருகிறது. நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி, பூம்புகார், கொள்ளிடம் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

இதன் காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

அதேசமயம், இன்று நடைபெறவிருக்கும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள், திட்டமிட்டப்படி நடக்கும் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார்.

ஆனால், இன்று நடைபெறவிருந்த அம்பேத்கர் சட்டக்கல்லூரி தேர்வுகள், சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீண்டும் விட்டு விட்டு மழை பெய்யத் தொடங்கி உள்ளது.

இதன் காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் தவித்து வருகின்றனர்.