டில்லி:

நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள  ‘கலு’ காவல்நிலையம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் உள்ள 15666 காவல் நிலையங்களை ஆய்வு செய்து பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

கடந்த  2015ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற டிஜிபி மாநாட்டில் பிரதமர் மோடியின் அறிவுரைப் படி,காவல் நிலையங்களின் தரவரிசை பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம்  வெளியிட்டு வருகிறது.

அதன்படி நாட்டின் 10 சிறந்த காவல் நிலையங்களை அடையாளம் கண்டு அவற்றை அங்கீகரிக்கும் வகையில்  பட்டியலிட்டு வருகிறது.

அந்தப் பட்டியலில் ராஜஸ்தான் மாநிலம் பிகாநிர் மாவட்டத்தில் உள்ள கலு காவல்நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது. குற்றங்களை தடுத்தல், விசாரணை, வழக்குகளை முடித்து வைத்தல், சட்டம் ஒழுங்கை காத்தல் போன்ற செயல்பாடுகள் காரணமாக அதற்கு முதலிடம் கிடைத்துள்ளது.

2வது இடத்தில்  அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள நிகோபார் மாவட்டத்தை சேர்ந்த கேம்ப்பெல் பே காவல் நிலையம் பிடித்துள்ளது. இங்கு, பெண்களுக்கான தனி உதவி மையம், தொழில்நுட்ப அறை, புகார் அளிப்பவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு தேவையான வசதிகள்  செய்யப்பட்டு உள்ளது.

3-வது இடத்தில் மேற்குவங்க மாநிலத்தின் மூர்ஷிதாபாத்தில் உள்ள ஃபராக்கா காவல்நிலையம் உள்ளது.  இங்கு குளிர் சாதன வசதியுடன் கூடிய அறை, பொதுமக்கள் – காவலர்கள் தொடர்புக்கு ஏற்ற சூழல், சிசிடிவி கேமராக்கள், தீயணைப்பு வசதிகள் போன்ற வசதிகள் இந்த காவல் நிலையத் தில் சிறப்பாக உள்ளன.

நாடு முழுவதும் உள்ள 15,666 காவல்நிலையங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு வெளியான பட்டியலிலும், கலு காவல் நிலையமே முதலிடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோல, அந்தமான, மேற்கு வங்க மாநிலங்களை சேர்ந்த அதே காவல்நிலையங்களே தற்போதும் அதே இடத்தை தக்க வைத்துள்ளன.