பெங்களூரு: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடந்துவரும் மூன்றாவது மற்றும் இறுதி டி-20 போட்டியில் கேப்டன் கோலி டாஸ் வென்றும் தவறான முடிவு எடுத்துள்ளார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

ஏனெனில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் வெறும் 134 ரன்களை மட்டுமே எடுத்தது.

பெங்களூரு மைதானம் சேஸிங் செய்வதற்கு மிகவும் ஏற்ற மைதானம் என்பது கிரிக்கெட் பிரியர்கள் பலருக்கும் தெரிந்த விஷயம். அப்படியிருக்க, டாஸ் வென்றும் அவர் ஏன் பேட்டிங் தேர்வுசெய்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு கோலி அளித்த பதிலைப் பாருங்கள்.

“உலகக்கோப்பை டி-20 தொடர் வருகிறது. ஒவ்வொரு மைதானமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். நாம் எல்லா நேரத்திலும் டாஸ் வெல்வோம் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே, சில மாறுபட்ட முடிவுகளையும் எடுத்தாக வேண்டியுள்ளது. சேஸிங் செய்வதற்கு ஏற்ற பிட்சில் முதலில் பேட்டிங் செய்யும் பயிற்சி நமது வீரர்களுக்கு தேவை. எனவேதான் இந்த முடிவு” என்றார்.

இதன்மூலம் அணியை அனைத்து சூழல்களுக்கும் தயார்செய்யும் வகையில் விராத் கோலி ஒரு துணிச்சலான முடிவை எடுத்துள்ளார் என்பது தெரிய வருகிறது. ஆனால், தற்போது இந்திய அணியின் வெற்றி கேள்விக்குறியாகி இருப்பதால், விமர்சனங்களையும் தவிர்க்க முடியவில்லை.