வாசனை தேடிவந்த ராஜ்யசபா சீட் – காரணம் இதுவா? அதுவா?

தங்கள் கட்சிக்கு எப்படியேனும் ஒரு ராஜ்யசபா இடத்தைக் கொடுத்தாக வேண்டும் என்று அதிமுகவை மிரட்டாமல் மிரட்டி வந்த தேமுதிக தற்போது ஏமாந்து போயிருக்க, சைலன்டாக சடுகுடு ஆடியதாய் சொல்லப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் என்ற ஒரு கட்சியைப் பெயரளவிற்கு நடத்திவரும் ஜி.கே.வாசன், அதிமுக முகாமிலிருந்து, முக்கியத்துவம் வாய்ந்த ராஜ்யசபா சீட்டைப் பெற்றுவிட்டார்.

வாசனுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று அறுதியிட்டுச் சொன்னவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என்று தேடித்தான் பார்க்க வேண்டும். எனவே, நிலைமை இப்படியிருக்க, இவருக்கு எப்படி இந்த வாய்ப்புக் கிடைத்தது என்பது குறித்து இருவிதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.

தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை நடத்திவந்த கருப்பையா மூப்பனார் மறைந்தவுடன், அவரது மகன் வாசன், இனிமேலும் தனிக்கட்சி போனியாகாது என்று நினைத்தாரோ? அல்லது காற்று காங்கிரஸின் பக்கமாக அப்போது வீசுகிறது என்பதை அவருக்கு யாரேனும் சொன்னார்களோ என்னவோ, சோனியா காந்தியின் முன்னிலையில் மதுரையில் வைத்து தன் கட்சியின் அஸ்தியை காங்கிரஸ் கடலில் கரைத்தார். அவரின் தந்தை உயிருடன் இருந்தபோதே, அஸ்தி கரைப்புக்கான வரைவு செயல்திட்டம் இறுதிசெய்யப்பட்டுவிட்டது.

அதன் பிறகான 10 ஆண்டுகளுக்கு, காங்கிரஸின் தயவால், அரசியல் ஆதாயங்களை மிக நன்றாகவே அனுபவித்தார் வாசன். ஆனால், ஒரு இக்கட்டான சூழலில் காங்கிரஸ் சிக்கியபோது, கட்சியிலிருந்து யோசிக்காமல் வெளியேறிய இவர், யார் தூபம் போட்டார்களோ என்னவோ, மீண்டும் திருச்சியில் வைத்து சற்றே ஆர்ப்பாட்டமாக அதே ‘தமிழ் மாநில காங்கிரஸ்’ என்ற பெயரிலான ஒரு கட்சியைத் தொடங்கினார்.

அவரின் தந்தையின் பின்னால் அன்று இருந்த பலரும், அப்போதும் வாசனின் பின்னால் சென்றார்கள் ஏதோ சில காரணங்களுக்காக! ஆனால், அதிரடியான அரசியலில், பேசுவதற்கே காசு கேட்கும் சுபாவத்தைக் கொண்ட இவரால் கரையேற முடியுமா? என்பதையெல்லாம் இவருடன் சென்ற அவர்கள், அப்போது, அவ்வளவாக யோசிக்கவில்லை போலும்.

2016 சட்டமன்ற தேர்தலின் சூடான சூழலில், ஜெயலலிதாவுடனான டீலை கூலாக முடித்துவிடலாம் என பகல் கனவு கண்டுகொண்டிருந்தார் வாசன். ஆனால், கர்ஜிக்கும் அரசியல்வாதியான வைகோ போன்றவர்களையே 2011 சட்டமன்ற தேர்தலில் மூக்குடைத்து முச்சந்தியில் நிறுத்திய ஜெயலலிதா, வாசன் வகையறாக்களை எப்படி டீல் செய்வது என்று அறியாதவரா என்ன?

கடைசியில், செல்லாதவர்கள் அணிவகுத்த மக்கள் நலக் கூட்டணியில், ரிசர்வ் செய்யாமலேயே சீட் கிடைக்க, இவர் அங்கே போய் உட்காருவதற்கு எத்தனித்த நேரம், இவரின் பின்னால் வந்த பலரும், சே சே… இந்த தென்னைமரம் காய்க்காது என்பதை உணர்ந்து, ஆளுக்கொரு திசையில் சிதறி ஓடிவிட்டார்கள்.

அவர்களில் ஒருவர், தன்னை ‘காலிப் பெருங்காய டப்பா’ என்று சட்டசபையில் விமர்சித்தவரின் முன்னாலேயே சென்று கைகட்டி நின்று ராஜ்யசபைக்கு டிக்கெட் வாங்கியது உச்சகட்ட சுவாரஸ்யம்..!

கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் அதன்பிறகான காலகட்டங்களில், காவிக் கட்சியுடன், வாசன் நெருங்கிச் செல்வதாய் கூறிய செய்திகள் அவ்வப்போது ஊடகங்களில் இடம்பெறத் தவறியதில்லை.

இப்போதும்கூட, அதிமுக கூடாரத்தில் ராஜ்யசபா சீட்டுக்காக பலரும் பலவிதங்களில் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார்கள் என்று பட்டியலிடப்பட்ட சூழலில், டெல்லியின் காவி அதிகார மட்டங்களின் மூலம் வாசன் காய் நகர்த்தி வருகிறார்; இவருக்கான சீட் டீலிங் ஓகே ஆகும்பட்சத்தில், இவர் நடத்திவரும் கட்சியை, தாமரைக் கட்சியுடன் ஐக்கியமாக்கவும் தயாராக இருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வரத்தான் செய்தன.

ஆனால், இத்தகைய செய்திகளை கண்களைக் குத்தவைத்துப் படிக்காமல், மேலோட்டமாக மேயவிட்டு, வேறு செய்திகளுக்குத் தாவிப் போனவர்கள்தான் அதிகம்! இதெல்லாமா நடக்கும்..! என்பதே அவர்களின் கணிப்பு.

ஆனால், இன்று இப்படி நடப்பதைப் பார்த்தால், அப்படியும் நடந்துவிடும் போலும்! என்று அப்போது ‘உச்’ கொட்டிக் கடந்து சென்றவர்களே இப்போது திகைக்கும் நிலை!

ஆக, ஒட்டுமொத்தக் கட்சியையும் மறுபடியும் கரைப்பதற்கான டீலிங்தான் இந்த ராஜ்யசபா சீட் என்ற விவாதம் ஒருபுறமிருக்க, வாசனுக்கு சீட் கிடைத்ததற்கு, வேறொரு காரணத்தையும் அதிமுக முகாமிலிருக்கும் குரல்கள் சில தெரிவிக்கின்றன.

கடந்த ராஜ்யசபா தேர்தலின்போது, அதிமுக தரப்பில் 2 சீட்களை எடுத்துக்கொண்டு, மூன்றாவது சீட், தேர்தல் ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி, மக்களவைத் தேர்தல் வாஷ்அவுட் நிலைமைக்குப் பிறகு, இதுவேனும் கிடைக்காதா மகனை மகிழ்விக்க? என்று ஏங்கி தவித்துக்கொண்டிருந்த தைலாபுரத்தின் பக்கம் சிம்ப்பிளாக தள்ளிவிடப்பட்டது.

ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் இந்த ஒதுக்கீடு என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்க, துப்பறியும் ஆர்வம் கொண்ட சிலரோ வேறு கதையை ஓட்டினார்கள்.

தன் ஆதரவாளர் சந்திரசேகருக்கு ஒரு சீட்டை இபிஎஸ் எடுத்துக்கொள்ள, தன் ஆதரவாளர் முகமது ஜானுக்கு ஒரு சீட்டை ஓபிஎஸ் எடுத்துக்கொள்ள, மூன்றாவது சீட்டைப் பாதியாக பிரித்துக்கொள்ள முடியாத பரிதாபச் சூழலில், பல கணக்கீடுகளை அடிப்படையாக வைத்து, அதை ராமதாஸின் பக்கம் தள்ளிவிட்டுவிட்டனர் என்பதே அந்தக் கதை. அந்தக் கதையில் நிறைய லாஜிக் இருந்ததால், நிராகரிக்க முடியாத நிலை.

இப்போதும் அதேபோன்றதொரு கதை; அதேமாதிரியான லாஜிக். தன் ஆதரவாளர் தம்பிதுரைக்கு ஒரு சீட்டை எடப்பாடி எடுத்துக்கொள்ள, தன் ஆதரவாளர் முனுசாமிக்கு ஒரு சீட்டை ஓபிஎஸ் எடுத்துக்கொள்ள, பாதியாக பிய்த்துக்கொள்ள முடியாத மூன்றாவது சீட்டை, டெல்லி அதிகார மைய லாபியுடன் பெரிய துண்டைப் போட்டு காத்துக்கொண்டிருந்த வாசனின் பக்கம் தள்ளிவிட்டுவிட்டார்கள் அதிமுக அதிகார மையத்தினர்! என்கிறார்கள்.

சரி, இதுவரை ஓகே. ஏற்கும்படியாக உள்ளது கதை.
ஆனால், வேறுசிலர் அளந்துவிடும் கதைதான் காதைக் கடித்துப் புண்ணாக்குவதாய் இருக்கிறது! வாசனுக்கு சீட் கொடுப்பதன் மூலமாக, டெல்டா பிராந்தியத்தில், வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்குகளை அள்ளிவிடலாம் என்ற எண்ணத்தில் அதிமுக தாராளம் காட்டியுள்ளதாம்!

டெல்டா பிராந்தியத்தில் காங்கிரஸ் கட்சிக்கென்று வாக்கு சதவீதம் உண்டென்பது உண்மை. ஆனால், அங்கே வாசனின் குடும்பத்தாருக்கென்று தனியான வாக்கு வங்கி இருக்கிறதென்பது எப்போதும் நிரூபிக்கப்படாத ஒன்று. அப்படி கொஞ்சமேனும் இருப்பது உண்மையென்றால், கடந்த 2014 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பாக, தஞ்சைத் தொகுதியில் வாசன் துணிந்து நின்றிருப்பார்! எனவே, இந்த சிறிய விஷயத்தைக்கூடவா அதிமுக அறியாது?

நன்றாக தேய்ந்து போனாலும், சற்றேனும் ஒத்துக்கொள்ளக்கூடிய செல்வாக்கைக் கொண்ட தேமுதிகவின் மிரட்டல்களை எளிதாகப் புறந்தள்ளிய அதிமுக, வாசனின் கட்சியை நிச்சயமாக ஒரு பொருட்டாகவே மதித்திருக்க வாய்ப்பில்லை.

பிரித்துக்கொள்ள முடியாத மூன்றாவது சீட் மற்றும் வலுவான டெல்லி நெருக்கடி என்ற இரண்டு காரணங்களால்தான், பலரும் குட்டிக்கரணம் அடித்து முயன்று பார்த்த ராஜ்யசபா சீட், சைலன்ட் கேம் ஆடிய வாசனிடம் போய் சேர்ந்துள்ளது.

செய்திகள் சொல்வதைப்போன்று, வாசன் தன் கட்சியை பாரதீய ஜனதாவில் இணைத்தால், அதனால் பாரதீய ஜனதாவுக்கென்று தமிழகத்தில் கிடைக்கப்போகும் தேர்தல் லாபமென்று எதுவும் இருக்கப்போவதில்லை. ஆனால், தமிழகத்தில் பாரம்பரிய காங்கிரஸ் குழு என்று அறியப்பட்ட ஒரு குழுவையே, எங்களுள் இணைத்துக் கரைத்துவிட்டோம் என்ற உதவாதப் பெருமை வேண்டுமானால் அக்கட்சிக்கு கிடைக்கலாம்..!

அதுதான் அவர்களின் திருப்தியென்றால், அதில் நாம் சொல்வதற்கு எதுவுமில்லை..!

அன்று, தமாகா முகாமிலிருந்து தப்பி ஓடி அடைக்கலம் புகுந்த எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்திற்கு அதிமுக சார்பாக ராஜ்யசபா சீட்..!

இன்று, தமாகா என்ற பெயரை இப்போதுவரை தக்கவைத்திருக்கும் ஜி.கே.வாசனுக்கு அதே அதிமுக சார்பாக ராஜ்யசபா சீட்..!

எதற்கும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும் போலும்..!

 

– மதுரை மாயாண்டி