கஜா புயல் ஏற்பட காரணம் ஓ.என்.ஜி.சி.!: பேராசிரியர் ஜெயராமன் அதிர்ச்சி குற்றச்சாட்டு

ஜா புயல் நிவாரணப் பணியில் சந்தடிசாக்கில் ஓஎன்ஜிசி நுழைவதாக, மீத்தேன் எதிர்ப்பு போராளி  பேராசிரியர் ஜெயராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“கடந்த 15ஆம் தேதி வீசிய கஜா புயலால் காவிரிப் படுகை மாவட்டங்கள் சின்னாபின்னமாகிவிட்டன. இவ்வளவு பெரிய பேரழிவை காவிரிப்படுகையில் எந்த புயலும் ஏற்படுத்தியதில்லை. வழக்கத்திற்கு மாறாக, கடலைத் தாண்டி கரைகடந்த பின்பும் கொஞ்சமும் தளர்ச்சியடையாமல், காவிரிப்படுகையைத் தாண்டி, திண்டுக்கல், தேனி மாவட்டம் வரை நாசம் செய்தது.

இந்த புயல் காவிரிப்படுகையை நோக்கி நகர்வதற்குக் காரணம், காவிரிப்படுகையில் நடந்து கொண்டிருக்கும் வரைமுறையற்ற எண்ணெய் – எரிவாயு எடுப்பதும், இரவு பகலாக எண்ணெய் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களில் எரிவாயு எரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் நிலவும் கூடுதல் வெப்பமும் காரணம் என்று எண்ணெய்க் கிணறுகள் பற்றிய அனுபவ அறிவு மிக்க தொழில்நுட்பவாதிகள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

அவ்வாறெனில், இந்த கஜா புயலைக் காவிரிப்படுகைக்கு வரவழைத்தற்கும், புயலின் இந்த தீவிரத்துத்திற்கும் எண்ணெய் – எரிவாயு வளத்தை சூறையாடி வரும் எண்ணெய் நிறுவனங்களே காரணம். பல்வேறு துணை நிறுவனங்கள் செயல்பட்டாலும், காவிரிப்படுகையில் எண்ணெய் வளச்சூறையில் முன்னிலை வகிப்பது ஓஎன்ஜிசி தான். காவிரிப் படுகையின் நிலத்தடி நீரைப் பயன்படுத்த முடியாதபடி பாழடித்து வருவது மட்டுமின்றி, பல பகுதிகளில் புற்றுநோய் முதல் தோல்நோய் வரை வாரி வழங்கி வருகிறது. (சான்று: அடியக்கமங்கலம், வெள்ளக்குடி, கதிராமங்கலம்) வரைமுறையற்ற வகையில் எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதோடு, மீத்தேன், ஷேல் மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன்களை காவிரிப்படுகையில் எடுப்பதற்கும் சமீபத்தில் உரிமை பெற்று விட்ட ஓஎன்ஜிசி காவிரிப்படுகையை அழிக்க இருக்கும் பேரபாய சக்தி. (மற்றொன்று வேதாந்தா நிறுவனம்).

1950களின் இறுதியில் கண்காணாத இடங்களில் எண்ணெய்க் கிணறுகளை அமைத்து வந்த ஓஎன்ஜிசி, 1985 க்குப் பிறகு மக்கள் வாழ்விடங்களிலேயே சகட்டுமேனிக்கு எண்ணெய்க் கிணறுகளை அமைத்து வருகிறது. அபாயத்தை உணர்ந்து கொண்ட மக்கள், இன்று ஓஎன்ஜிசியை எதிர்த்துப் போராடுகிறார்கள். வேறு எந்த நிறுவனம் வந்தாலும் போராடுவார்கள்.

இந்நிலையில்தான், காவிரிப் படுகை வெப்பமண்டலமாக மாறிவரும் நிலையில், கஜா புயலின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. 10 இலட்சம் பேர் உணவுக்காகவும், குடிநீருக்காகவும் அல்லாடிப்போனார்கள். 2. 49,000 பேர் முகாம்களில் முடங்கி இருக்கிறார்கள். 1.70.000 மரங்கள் விழுந்து விட்டன. 1,20,000 குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் சரிந்தன. 63 பேர் இறந்து போனார்கள். உடமைகளை இழந்து மக்கள் கையேந்தும் நிலை வந்தது.

இந்திய அரசு இதுவரை பத்து பைசா கூடத் தரவில்லை. தமிழக அரசு பிரச்சினையைக் கையாளத் தெரியாமல் தவிக்கிறது. தமிழகத்தின் ஒரு பகுதி மக்கள் துன்பத்தில் சிக்கியவுடன் ஏனையத் தமிழர்கள் நிவாரண பொருட்களோடு விரைந்து வந்து உதவுகிறார்கள். தன் இனம் வீழ தாங்காது தமிழர் உள்ளம்.

இந்நிலையில் கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணத்திற்கென ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக ஓஎன்ஜிசி அறிவித்துள்ளது. தமிழக அரசு தன் கடமையிலிருந்து தவறிய நிலையில், அந்த வாய்ப்பை ஓஎன்ஜிசி பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. எந்தப் பகுதிகளிலெல்லாம் மக்கள் எதிர்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் எதிர்ப்பை சமாளிக்கும் உத்தியாக “சமூக பொறுப்புணர்வு திட்டம்” என்ற பெயரிலும், பெயரே சொல்லமுடியாத வகைகளிலும், விளம்பரங்களிலும் கோடிக்கணக்கான ரூபாய்களை அள்ளி வீசி வருகிறது.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலெல்லாம் வீட்டுக்கு 10 கிலோ அரிசி தர கணக்கெடுப்பு நடத்துகிறார்கள். இங்கெல்லாம் எண்ணெய்க் கிணறுகளை ஓஎன்ஜிசி அமைத்திருக்கிறது அல்லது அமைக்க இருக்கிறது. காவிரிப்படுகையில் பாதிப்புக்கு உள்ளான 10 லட்சம் பேருக்கும் நிவாரணம் வழங்கிவிடவில்லை. பாதிப்புக்குள்ளான எளிய மக்கள் வாழும் பகுதிகளுக்கு நிவாரணம் கொடுக்கும் நோக்கமும் இவர்களுக்கு இல்லை. இவர்களின் நோக்கத்தை மக்கள் அறிவார்கள். ஒரு கதை உண்டு. நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த ஒரு திருடன், திருடிக்கொண்டிருந்தபோது, அங்கே தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை அழத் தொடங்கிய உடன், ஓடிப்போய் அவன் தொட்டிலை ஆட்டினானாம். ஆனால், இது கதை. திருடனின் நோக்கம் குழந்தையை நிம்மதியாகத் தூங்க வைப்பது அல்ல. குழந்தையின் அழுகை சத்தத்தில் வீட்டில் உள்ளவர்கள் எழுந்து விட்டால் தான் திருட முடியாதே என்பதுதான் அவன் கவலை. ஓஎன்ஜிசியின் அக்கறைக்கு என்ன காரணம் என்பது மக்களுக்குப் புரிகிறது.

இதுபோன்ற நிவாரணம், பரிசுப் பொருட்களை வழங்குவதால் எண்ணெய் – எரிவாயு எடுக்க மக்கள் அனுமதித்துவிட முடியாது. வெட்டுப்பட இருக்கிற ஆட்டுக்குட்டிக்கு ஒருகட்டு அகத்திக்கீரை! அதுதான் காவிரிப்படுகை மக்களுக்கு ஓ.என்.ஜி.சி அளிக்கும் நிவாரணம். வாயில் அகத்திக்கீரைக்கட்டை கசாப்புக்கடைக்காரன் திணிக்கிறான் என்பதற்காக கழுத்தில் கத்தி விழுவதை ஆடு ஏற்க முடியாது.

அதுமட்டுமல்ல, கஜா புயல் நிவாரணமாக ஒரு கோடி ரூபாய் பணம் ஒதுக்கி இருப்பதாக ஓஎன்ஜிசி அறிவிக்கிறது. இதுபோன்ற அழிவுகளை கொண்டுவருவதே ஓஎன்ஜிசி போன்ற எண்ணெய் நிறுவனங்கள்தாம். ஒரு இலட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு மேல் அழிவு ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி, கதிராமங்கலத்தில் 15 ஆண்டுகளுக்கும் முன்னால் அமைக்கப்பட்ட ஒர் எண்ணெய்க் கிணறின் எண்ணெய்க் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய்யும் நீரும் ஓடிய நிலையில்,கடந்த காலத்தில் மாவட்ட நிர்வாகத்தின் ஓஎன்ஜிசி ஆதரவு போக்கைக் கண்ணால் கண்டு, அனுபவித்து, கசந்து போன மக்கள், மாவட்ட ஆட்சியர் வரவேண்டும் என்று வலியுறுத்திப் போராடத் தொடங்கினர். மக்களை காவல்துறையை விட்டு அடித்து நொறுக்கி பலரைக் கைது செய்த பிறகு, மாலை 6 மணியளவில் குழாயை ஓஎன்ஜிசி அடைத்தது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கச்சா எண்ணெய் ஓடியதால் தங்களுக்கு இழப்பு ஆறு லட்சம் என்று ஓ.என்.ஜி.சி. குற்றம்சாட்டியது.

அவ்வாறெனில், ஒரு எண்ணெய்க் கிணற்றிலிருந்து ஒரு நாளைக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு எண்ணெய் எடுக்கப்படுகிறது. ஓராண்டில் ஒரு கிணற்றிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயின் மதிப்பு 55 கோடி ரூபாய். இதுபோல 712 கிணறுகள் அமைத்து, 1985 முதல் ஓஎன்ஜிசி காவிரிப் படுகையின் எண்ணெயை உறிஞ்சி குடித்து இருக்கிறது. பல இலட்சம் கோடிகளுக்கு, கற்பனைக்கு எட்டாத அளவிற்கு, தமிழ்நாட்டின் எண்ணெய் வளத்தை சூறையாடிக் கொண்டிருக்கும் ஓஎன்ஜிசி, நிவாரணமாக ஒரு கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது என்பது தமிழர்களை எள்ளி நகையாடுவதாகும். தமிழகத்தை சூறையாடியப் பணத்தில் ஓஎன்ஜிசி கொடுப்பது ஒருகோடி தான். எங்கள் மண்ணிலிருந்து எடுத்த பணத்தில் ஒரு சிறு தொகையைத் தான் நிவாரணமாகத் திருப்பித் தருகிறது. நிவாரணமாக சில லட்சம் கோடிகளைத் தமிழக அரசிடம் ஒப்படைத்துவிட்டு, தமிழகத்தை விட்டு ஓஎன்ஜிசி வெளியேற வேண்டும்.

பேரிடர்களிலிருந்து தமிழகத்தை இனிவரும் காலங்களில் காக்க இதுவே வழி. ஒருகோடி ரூபாய் கொடுத்ததற்காக, ஓஎன்ஜிசியின் செயல்பாடு உத்தமமானது என்று ஏற்க மக்கள் முட்டாள்கள் இல்லை.

காவிரிப்படுகையில் மேலே பயிர்வளமும், நிலத்துக்கடியில் கனிமவளமும் இருக்கின்றன. கஜா புயலாவது நிலத்துக்கு மேலே இருந்தைதை தான் சூரையாடியது. ஆனால், ஓஎன்ஜிசி நிலத்தின் அடியில் இருக்கும் எண்ணெய் எரிவாயுவை சூறையாடுவதோடு நிலத்தடி நீரையும் ஒழித்துக்கட்டுகிறது.

கஜா புயல் திருகிப்போட்ட , மரங்களையும் பயிர்களையும் மீண்டும் வளர்த்துவிடலாம். ஆனால், ஒ.என்.ஜி.சி. சூறையாடிக்கொண்டிருக்கும் கனிமவளத்தை நம்மால் திரும்பப்பெறவே முடியாது” – இவ்வாறு தனது முகநூல் பதிவில்  பேராசிரியர் த. செயராமன் பதிவிட்டிருக்கிறார்.