மும்பை:

ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவைக் கட்டணங்களை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

இரண்டாவது காலாண்டிற்கான நிதிக்கொள்கையை, மும்பையில் இன்று வெளியிட்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், அனைத்து ஏடிஎம் கட்டணங்களையும் மறுஆய்வு செய்ய கமிட்டி அமைக்கப்படும் என்றார்.

இரண்டு மாதங்களுக்குள் இந்த கமிட்டி அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் குறுகிய கால கடனான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 5.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறிய சக்தி காந்த தாஸ், இதன் மூலம் வீடு, வாகன கடனுக்கான வட்டி விகிதம் குறையக்கூடும் என்றார்.

மார்ச் 31 -ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக குறைந்த நிலையில், அதிவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின் பட்டியலில் சீனா மீண்டும் முன்னிலை பெற்றது.

இதனை அடுத்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளதாக தெரிகிறது.