கர்நாடகாவில் நடந்து முடிந்த ஐந்து தொகுதிகளின் இடைதேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

--

கர்நாடகத்தில் மூன்று பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் இரண்டு சட்டசபை தொகுதிகள் என மொத்தம் ஐந்து தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது.

கர்நாடகம் மாநிலத்தின் சிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது.

karnataka

இந்த தொகுதிகளில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்தக் கூட்டணியை எதிர்த்து பாஜக மட்டுமே களத்தில் போட்டியிட்டது. பெல்லாரி உள்பட மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து மொத்தம் 31 பேர் போட்டியிட்டனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. ஐந்து தொகுதிகளில் மொத்தம் 54,54,275 பேர் வாக்களித்தனர். பெல்லாரியில் 1901, சிவமோகாவில் 2002, மாண்டியாவில் 2047, ஜம்கண்டியில் 226, ராமநகரில் 277 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 1502 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாகக் கருதப்பட்டு, போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

பாராளுமன்ற தொகுதிகளான சிவமோகாவில் 61.5 சதவீதம், பெல்லாரியில் 63.85 சதவீதம் , மாண்டியாவில் 53.93 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதேபோல், சட்டசபை இடைத்தேர்தலை சந்தித்த ராமநகரில் 73.71 சதவீதமும், ஜம்கண்டியில் 81.58 சதவீத வாக்குகளும் பதிவாகின.

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. வாக்குகள் எண்ணப்பட்டு மதியத்துக்குள் வெற்றி நிலவரம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.