ஆய்வு கூட்டம் இரவில் நடைபெறுகிறது: டிடிவிக்கு அமைச்சர் பதில்

தஞ்சாவூர்:

புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்களும், அதிகாரிகளும் பகல் நேரத்தில் களத்தில் பணியாறறுவதால், இரவில்தான் ஆய்வு கூட்டம் நடத்தி அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

கடந்த 15ந்தேதி வீசிய கஜா புயலால் நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் உருக்குலைந்துள்ளன. கஜா புயலுக்கு இதுவரை 63 போ் உயிரிழந்துள்ள தாகவும், லட்சக்கணக்கான தென்னை , வாழை மரங்கள் உள்பட பல நூறு ஏக்கர் பயிர்களும் நாசமாகி உள்ளன.மேலும் ஆயிரக்கணக்கில் மின் கம்பங்களும் சரிந்துள்ளதால், பல இடங்களில் மக்கள்  மின்சாரம் இன்றி இருளில் தவித்து வருகின்றனர்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், புயல் பாதித்த பகுதிகளில் அரசு சாரா தன்னார்வலா்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், புயல்பாதித்த பகுதிகளில்  நிவாரணம் வழங்கி வரும் அமமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் ஆர்.கே.நகர் எம்எல்ஏவுமான டிடிவி தினகரன், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கே ரூ.25,000 கோடி தேவைப்படும். இதுதவிர மற்ற மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.  ஆனால், முதல்வர் 15 ஆயிரம் கோடி மட்டுமே மத்திய அரசிடம் நிவாரணமாக கேட்டுள்ளார் என்று குற்றம் சாட்டினார்.

மேலும், மக்கள் கடுமையான மனஅழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர். அமைச்சர்களும், அதிகாரிகளும் அதுகுறித்து ஏதும் தெரிவிக்கவில்லை என்றும், ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட வில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்களும், அதிகாரிகளும் பகல் நேரத்தில் பணியாறறுவதால், இரவில்தான் ஆய்வு கூட்டம் நடத்தி தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என்று கூறினார்.