லக்னோ:

உத்திரப் பிரதேசத்தில் பாஜகவின் புகழ்பெற்ற தேர்தல் கருத்துக் கணிப்புகளை வென்று சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.


உத்திரப் பிரதேச தேர்தல் நிலவரம் குறித்து ‘தி பிரிண்ட்’ இணையதளம் நடத்திய கள ஆய்வின் அடிப்படையில் வெளியிட்டுள்ள கட்டுரை விவரம்:

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், உத்திரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 73(தோழமைக் கட்சிகள் 2 தொகுதிகள்) தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றியது.

ராமஜென்ம பூமி பிரச்சினை உச்சத்தில் இருந்தபோதுகூட, இதுபோன்ற வெற்றியை பாஜக பெறவில்லை.

பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் 43 சதவீத வாக்குகளைப் பெற்றன. அப்போது, எதிர்கட்சிகள் வாக்குகள் சிதறியதும் பாஜகவின் வெற்றிக்கு வழி வகுத்தது.

சமாஜ்வாதி கட்சி 22 சதவீதமும், பகுஜன் சமாஜ் கட்சி 20 சதவீதமும் வாக்குகளைப் பெற்றன. காங்கிரஸ் கட்சிக்கு 6 சதவீதம் வாக்குகள் கிடைத்தது. 2017-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக இதே வெற்றியைப் பெற்றது.

சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி வைத்தபோதிலும் போதிய வாக்குகள் கிடைக்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி குறிப்பிடத்தக்க வாக்குகள் பெற்றும் வெற்றிக்கு அது வழிவகுக்கவில்லை.

சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் நீண்ட காலமாக எதிர் திசையிலேயே பயணம் செய்து கொண்டிருந்தன. இரு கட்சிகளும் பாஜகவிடமிருந்து விலகியே இருந்தன. இதுவே, சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியும் எளிதில் கூட்டணி அமைக்க அச்சாரமாக அமைந்துவிட்டது.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் கூட்டணி பாஜக&வைவிட அதிக இடங்களில் பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றே தெரிகிறது.

எனினும் கூட்டணி என்பது கூட்டல் மட்டுமல்ல,அதில் கழித்தலும் உண்டு. பகுஜன் சமாஜ் கட்சி வாக்குகள் சமாஜ்வாதி கட்சிக்கு 90 சதவீதம் விழ வாய்ப்புள்ளது. ஆனால், சமாஜ்வாதி கட்சியின் வாக்குகள் 70 சதவீதம் மட்டுமே பகுஜன் சமாஜ் கட்சிக்கு விழும் என்று தெரிகிறது.

க்கட்சியின் மீதமுள்ள வாக்குகள் மற்ற கட்சிகளுக்கு விழும் வாய்ப்புள்ளது.

ஒருவேளை காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் சிதறினால், பாஜகவுக்கு 46 மக்களவைத் தொகுதிகள் கிடைக்கும்.

கடந்த 2014-ம் ஆண்டு பாஜகவுக்கு கிடைத்த வெற்றி, மீண்டும் கிடைப்பது சந்தேகம் என்பது எல்லோருக்கும் தெரியும். பிரதமர் நரேந்திர மோடிக்கு அப்போது இருந்த புகழ் இப்போது இல்லை என்பதே உண்மை.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, விவசாயிகள் பிரச்சினை, வறட்சி, மாடு விவகாரம்,விலைவாசி உயர்வு மற்றும் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கு வீழ்ச்சி, கேலிக்குரியதாகு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஆகியவை பாஜகவுக்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும்.

விவசாயிகள் கடன் ரத்து என்ற வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றவில்லை. கரும்பு விவசாயிகள் அவர்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைக்காக காத்திருக்கிறார்கள். உருளைக்கிழங்கு விவசாயிகள், அவர்களது முதலீட்டை எடுக்க முடியவில்லை.

இவையெல்லாம் பாஜக மீண்டும் அமோக வெற்றி பெறுமா? என்ற கேள்வியை எழுப்புகின்றன.

உத்திரப் பிரதேச மக்களவைத் தேர்தலில், பாஜக 3 சதவீத வாக்குளை இழந்தால் 36 தொகுதிகளிலும், 6 சதவீத வாக்குகளை இழந்தால் 23 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி 54 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

பாஜக 9 சதவீத வாக்குகளை இழந்தால், பாஜகவுக்கு 12 தொகுதிகளில் மட்டுமே வெற்றி வாய்ப்பு அமையும். சமாஜ்-பகுஜன் கூட்டணிக்கு 65 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ளது.

கடந்த ஓராண்டில் கோரக்பூர், புல்பூர்,கைரானா மக்களவைத் தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்ததை வைத்துப் பார்க்கும் போது,மேலே உள்ள கணக்கு சரியாகும் என்றே தெரிகிறது.

உத்திரப் பிரதேச வெற்றியே, மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைப்பதை தீர்மானிக்கும்.
எப்படியோ, மத்தியில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பதை இம்முறையும் உத்திரப் பிரதேசமே தீர்மானிக்கப் போகிறது.
இவ்வாறு ‘தி பிரிண்ட்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.