கள்ளச்சந்தையில் ஆளுங்கட்சியினர் மது விநியோகம்! ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை,

ச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளுக்கு பதிலாக ஆளுங்கட்சியினர் குறிப்பிட்ட இடங்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மூடப்பட்ட மதுக்கடைகளுக்கு அருகே கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சாலை விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் அடிப்படைக் காரணமாக விளங்கிய தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை 5 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி பா.ம.க. மூடியது.

அதன் பயன்கள் கண்ணுக்குத் தெரியத் தொடங்கியுள்ள நிலையில் அதை சீர்குலைக்கும் முயற்சியில் சில சக்திகள் ஈடுபட்டிருக்கின்றன. அந்த சதிக்கு அரசும் துணை போவது கண்டிக்கத்தக்கது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை குறிப்பிட்ட இடங்களில் மாவட்ட சாலைகளாகவும், மாநகர சாலைகளாகவும் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழக அரசு, மற்றொருபுறம் ஆளுங்கட்சியினர் மூலம் கள்ளச்சந்தையில் மது வணிகத்தைத் தொடங்கியிருக்கிறது.

டாஸ்மாக் மதுக்கடைகளில் பெட்டிப்பெட்டியாக மதுப்புட்டிகளை வாங்கும் அ.தி.மு.க.வினர், அவற்றை மூடப்பட்ட மதுக்கடைகளுக்கு அருகில் மறைவான இடத்தில் வைத்து விற்பனை செய்கின்றனர்.

இதற்கு காவல்துறையினரின் ஆதரவும் உள்ளது. சில இடங்களில் அதிக கூட்டத்தைக் காரணம் காட்டி மதியம் 12 மணிக்கு முன்பாகவே மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. இவை சட்டவிரோத செயல்களாகும்.

டாஸ்மாக் மதுக்கடைகள் சில்லரை வணிகம் செய்வதற்காக மட்டுமே திறக்கப்பட்டவை ஆகும். ஆனால், அக்கடைகளில் தனிநபர்களுக்கு பல்வேறு அளவுகளில் பெட்டிப்பெட்டியாக மது விற்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

அரசு மதுக்கடைகளில் மொத்தமாக மது வணிகம் செய்யப்படுவது, 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவது போன்றவற்றைத் தடுக்கும் நோக்குடன் தான் மதுக்கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என பா.ம.க. தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

ஆனால், தீர்ப்பு வெளியாகி பல மாதங்களாகியும் இன்று வரை அந்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை. நீதிமன்றத் தீர்ப்புகளை அரசு மதிக்கும் லட்சணம் இது தான்.

மதுவை விற்று வருவாய் ஈட்டவேண்டும் என்ற எண்ணத்துடன் ஆட்சி செய்யாமல், மதுக்கடைகளை மூடி மக்களைக் காக்க வேண்டும் எண்ணத்துடன் நாடாள்வதற்கு ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்.

மதுக்கடைகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பெண்கள் போர்க்கோலம் பூண்டுள்ள நிலையில், அவர்களின் உணர்வுகளை மதித்து மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்கும் முடிவை கைவிட வேண்டும். அத்துடன் கள்ளச்சந்தையில் மது வணிகம் செய்யப்படுவதையும் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published.