அனைத்து சாதியினருக்கும் பூணூல்! மீண்டும் ஒரு “ராமானுஜ” முயற்சி!

அமெரிக்கை நாராயணன்

னைத்து சாதியினருக்கும் பூணூல் அணிவிக்கும் நிகழ்வை நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சி பிரமுகர் அமெரிக்கை நாராயணன்  அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

“ இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடியாக விளங்கியவர் இராமானுஜர்.  . சிறந்த மெய்யியலாளரான இவர், பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற ஓர் உயர்தர உரையை இயற்றி, ஆதி சங்கரரின் அத்வைதத் தத்துவத்திற்கு மாற்றுச்சொன்ன ஆன்மீகவாதி. திருவாய்மொழியின்  செவிலித்தாய் எனப் போற்றப்படுபவர். தமிழ்நெறி போற்றும் வைணவர்.

சாதி,மத வேறுபாடின்றி நம்பிக்கை கொண்டோருக்கு பூணூல் அணிவித்து பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர்.

தற்போதைய சூழலில் பூணூல் அணிவதை வைத்து சாதி ஏற்றத்தாழ்வுகள் குறித்த பிரச்சினை எழ ஆரம்பித்திருக்கிறது. இது தேவையற்ற சர்ச்சை.

ஆகவே வரும் ஞாயிறு அன்று, ( ஆவணி அவிட்டத்திற்கு முதல் நாள் ) அனைவருக்கும் பூணூல் அணிவிக்கும் நிகழ்வை நடத்த திட்டமிட்டிருக்கிறேன்.

பூணூல் நிகழ்வு குறித்த முகநூல் பதிவு

நாட்டு நலம் வேண்டி சாதி, மத, மொழி, இன வேறுபாடிண்றி – நம்பிக்கையுள்ளவர்கள் ஒன்று சேர்ந்து ( நம்பிக்கையுள்ள விருப்பப் படுபவர்கள் பூணூல் அணிந்தும்) பூணூல் அணியாமலும் காயத்ரி மந்திர ஜபம் 2 மணி நேரம் ஜபிக்கலாம்.

ஆர்வமுள்ளவர்கள் அணுகுவதை வைத்து நிகழ்வு உறுதி செய்யப்படும். அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்” என்று அமெரிக்கை நாராயணன் தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்த அறிவிப்பை வெளியிட்டு சில நாட்கள் ஆகின்றன. இதுவரை எவரும் தொடர்புகொள்ளவில்லை.   இந்த, பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் என்னை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துவிட்டு என் வீட்டிற்கு வரலாம்” என்றும் அமெரிக்கை நாராயணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புகொள்ள அமெரிக்கை நாராயணன் செல்போன் எண்: 98410 46342

முகவரி:

“இந்தியா” ( இல்லம்) எண்: 6, கலாஷேத்ரா அவின்யூ, இரண்டாவது தெரு, திருவான்மியூர், சென்னை- 41

(திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஐந்து நிமிட நடை தூரம்)

நாள்: வரும் 6.08.2017 ஞாயிறு

நேரம்: காலை 10 மணி