சென்னை:

வெளிமாநிலங்களில் படித்தும் வரும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து மர்மமான முறையில மரணம் அடைந்து வருவது வேதனை அளிப்பதாக கூறியுள்ள பாமக தலைவர் ராமதாஸ், இதுபோன்ற பிரச்சினையில் அரசு வேடிக்கை பார்க்காமல், வெளி மாநிலங்களில் படித்து வரும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சண்டிகரில்  முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவ மேற்படிப்பு பயின்று வந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மாணவர் கிருஷ்ணபிரசாத் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது,  மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என்று கூறி உள்ள அவர,  அவரது பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும், அனுதாபங்களும் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் கிருஷ்ணபிரசாத் அவருக்கு இந்தி தெரியாததால் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், அதன் விளைவாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் சண்டிகர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  ஆனால், இது ஏற்கத்தக்கதாக இல்லை.

கடந்த 20 நாட்களுக்கு முன் இராமேஸ்வரம் வந்த கிருஷ்ணபிரசாத் மிகவும் மகிழ்ச்சியாகவும், இயல்பாகவும் இருந்ததாகவும் அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.

அப்படிப்பட்டவர் எப்படி தற்கொலை செய்து கொள்வார்? எனவே, இது குறித்து காவல்துறை விரிவான விசாரணை நடத்த வேண்டும்.

அண்மைக்காலமாகவே வெளிமாநிலங்களில் தங்கி மருத்துவ உயர்கல்வி பயின்று வரும் மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.

இதற்கு முன் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த சரவணன் விஷ ஊசி செலுத்தி படுகொலை செய்யப்பட்டார்.

அவர் படுகொலை செய்யப்பட்டால் காலியாகும் மருத்துவ மேற்படிப்பு இடத்தில் சேர வாய்ப்புள்ள சிலர் தான் சரவணனை கொலை செய்திருக்கக்கூடும் என்று குற்றச்சாற்று எழுந்திருந்த நிலையில், அதை தற்கொலை என்று கூறி வழக்கை மூடி மறைக்க மருத்துவமனை நிர்வாகம் முயன்றது. ஆனால், அன்புமணி ராமதாஸ் முயற்சியால் அது கொலை என உறுதி செய்யப்பட்டது.

அதேபோல், திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்தைச் சேர்ந்த சரத்பிரபு கோவை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்து, யு.சி.எம்.எஸ் மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்பு படித்து வந்தார்.

கல்லூரி விடுதியில் நண்பர்களுடன் தங்கியிருந்த சரத் பிரபு 17.01.2018 அன்று காலை விடுதியின் கழிப்பறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் சரத்பிரபுவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரத்பிரபு நன்றாக படிக்கும் மாணவர் என்றும், அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்றும் குடும்பத்தினரும் நண்பர்களும் தெரிவித்துள்ளனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? கொல்லப்பட்டாரா? என்பது இன்று வரை கண்டறியப்படவில்லை.

இந்த இரு தமிழக மாணவர்களின் உயிரிழப்புகளின் பின்னணியில் சதி இருப்பது உறுதியாக தெரியவந்துள்ள போதிலும் அவற்றுக்கு இன்று வரை நீதி கிடைக்காதது வேதனையளிக்கிறது.

வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மருத்துவ மாணவர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. அவர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

ஆனால், தமிழகத்தை ஆளும் பினாமி அரசு இதுபற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. வெளிமாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தமிழக அமைச்சர்கள் அறிவித்தாலும் எதுவும் நடக்கவில்லை.

மர்மமான முறையில் இறந்த மானவர் கிருஷ்ணபிரசாத்தின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இது மாணவரின் உயிரை மீட்டுத் தருமா? வெளிமாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்கள் தொடர்ந்து உயிரிழப்பதை வேடிக்கைப் பார்க்காமல் மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.