பெண்கள் பாதுகாப்பு….. பேசிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்…..

பெண்கள் பாதுகாப்பு.. பேசிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்..

சிறப்புக்கட்டுரை – ஏழுமலை வெங்கடேசன்

ல்லா விஷயத்திலேயும் முன்னேறி சாதித்துக்கொண்டிருக்கிறோம் என்று மார்தட்டும் இந்த வேளையிலும்கூட, பெண்களுக்கு எதிரான கொடுமைகளை சர்வசாதாரணமாக கடக்கிறோம் என்பது எவ்வளவு பெரிய கேவலம்?

ஆண்களுக்கு எங்கிருந்து இவ்வளவு துணிச்சலும் குரூர புத்தியும் வருகிறது என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இப்படி இருக்கவேண்டும், அப்படி இருக்கவேண்டும் என்று பெண்க ளுக்கு சொல்வதில் காட்டும் அக்கறை புத்தியில், பத்தில் ஒரு பங்குகூட ஆண் குழந்தைகளை எப்படி வளர்க்கவேண்டும், இளைஞர்கள்மேல் குடும்பத்தினர் எப்படி கண்காணிப்பை வைக்க வேண்டும் என்று சொல்லப்படுவதில்லை.

நடுவழியில் நிர்கதியாய் நின்ற இளம் பெண் மருத்துவரை இழுத்துக்குகொண்டு போய் துடிக்க துடிக்க கூட்டாக சிதைத்து கொல்கிறார்கள். எரிக்கிறார்கள்.. காதல் என்ற பெயரில், நம்பி வந்த வளை நண்பர்களுக்கு விருந்தாக்கி உயிரை உரித்தெடுத்து பிணமாய் வீசி விட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்றே புரியாமல் பெண்ணைப்பெற்றவர்கள் மட்டும் ஒட்டு மொத்த சமூதாயமே மிரண்டுபோய்கிடக்கிறது..

இன்னும் கொடுமையான ஒரு சம்பவம், லேட்டஸ்ட்டாய் இந்த வரிசையில்..

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சென்றவாரம் அதாவது நவம்பர் 29-ந்தேதி ஒரு பதினைந்து வயது சிறுமியுடன் ஒரு இளைஞன்.. அவன் அவளிடம் நடந்துகொள்ளும் விதம் அங்கிருந்தவர் களுக்கு உறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சந்தேகம் வலுத்ததும் உடனே சில்ட்ரன் ஹெல்ப் லைனுக்கு போன் அடித்துள்ளனர். அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்க, ஸ்பாட்டில் அதிகாரிகள் வந்துவிட்டனர்.

விசாரித்தபோது ,அந்த ஆள் 23 வயது அன்பழகன் என்பதும் எலக்ட்ரானிக் பொருட்களை விற்கும் ஒரு கடையில் வேலைபார்ப்பவர் என்பதும் தெரியவந்தது. விருத்தாச்சலத்திற்கு சிறுமியை கூட்டிப்போக எழும்பூர் வந்திருக்கிறார். அவருக்கும் சிறுமிக்குமான உறவு பற்றிய கேள்விகள் அனைத்துக்கு பதில்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்தன.

சிறுமியை தனியாக விசாரித்தபோது, அவர் ஒவ்வொன்றாய் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். கேட்க கேட்க அத்தனையும் அதிர்ச்சியான ரகம். தாய் கள்ளக்காதலனோடு ஓடிப்போய்விட்ட நிலையில், தாத்தா பாட்டி பாதுகாப்பில் சிறுமி வளர்கிறாள். பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி.

மெரீனா கடற்கரை பக்கம் சிறுமி தனியாக நின்று செல்பி எடுத்துக்கொண்டிருந்தபோது அன்பழகன் அவளை அணுகி பேச்சு கொடுத்திருக்கிறார். எலக்ட்ரானிக் பொருட்களை தருகிறேன் என்று சொல்லி அருகிலுள்ள ஒரு கடைக்கு அழைத்துச்சென்று, ஷட்டரை மூடிவிட்டு கடைக்குள் வைத்து பலாத்காரம் செய்திருக்கிறார்.

விருத்தாச்சலத்திற்கு அழைத்துச்சென்று திருமணம் செய்துகொள்கிறேன் என்று வாக்குறுதி தந்து, பலாத்காரத்தை பல முறை நிகழ்த்தியுள்ளார்.  இது மட்டுமல்ல, சிறுமி சொன்ன விஷயங்கள் இன்னும் கொடுமையானவை.

ஏற்கனவே திண்டிவனத்தை சேர்ந்த 21 வயது புஷ்பராஜ் 39 வயது கொட்டாச்சி, 33 வயது ஆனந்த், 20 வயது விக்கி என்ற மேலும் நான்கு பேர் இதேபோல திருமணம் செய்துகொள்வதாககூறி சிறுமியை பலமுறை பாலியல் பலாத்தாரம் செய்துள்ளனர். அன்பழகன் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மற்ற நால்வரையும போலீஸ் தேட ஆரம்பித்து உள்ளது.

இங்குதான் ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிக்க தவறிவிடுகிறோம். பதினைந்துவயது சிறுமியை தொடுகிறோமே, அந்த சிறுமியே வலிய வந்தாலும் அவரை தொடுவது சட்டப்படி குற்றம் என்று எவருக்கும் உரைக்கவில்லை. எவ்வளவு பயங்கரமான காரியத்தை செய்கிறோம் என்பதே தெரியாமல் சர்வ சாதாரணமாக ஒரு சிறுமியின் உடலை சூறையாடிவிட்டு போயிருக்கிறார்கள்.
சின்னப்பெண்தானே, எவன் வந்து கேட்கப்போகிறான் என்ற அகம்பாவமான புத்தி எந்த அளவிற்கு அவர்களுக்கு இருந்திருக்கவேண்டும்.

சிறுமிமேல் கை வைத்தால் போக்சோ சட்டம் பாய்ந்து மரண தண்டனைவரை இழுத்துச்செல்லுமே என்ற பயம் இல்லாததே இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணம்.

அனாதை பெண்ணாக இருந்தாலும் அவள் மேல் பலாத்காரத்திற்காக கை வைத்தால் எப்பேர்பட்ட கொம்பனாக இருந்தாலும்சரி, சட்டம் உடனே வந்து இழுத்துக்கொண்டுபோய் கொஞ்ச நாளிலேயே மேல்லோகத்திற்கு அனுப்பிவிடும் என்ற முன்மாதிரிகள் இங்கே கிடையாது.

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு குற்றவாளிகள் என நிரூபணம் ஆனவர்களை தண்டிக்க நம்முடைய இத்துப்போன நடைமுறைகளையும் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக மீடியாக்கள் கையாள்கின்ற போக்கையும் மாற்றிக்கொள்ளாவிட்டால் இதுபோன்ற கொடுமைகளை ஒடுக்கவேமுடியாது.

மீடியாக்களையே எடுத்துக்கொள்வோம். நெஞ்சை பதறவைக்கும் ஒரு சம்பவம் நடந்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிக்குகிறவரைதான் அவர்களுக்கு பிரேக்கிங் நியூஸ். அடுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போதோ அல்லது தீர்ப்பு நாளிலோ மட்டும் அங்கே பார்வையை பார்ப்பார்கள். மற்றபடி இடையில என்ன நடக்கிறது என்பதை கவனிக்கவேமாட்டார்கள்.

ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில் கைதுகளுக்கு பின்னால் உடனே குற்றப்பத்திரிகை ஏன் தயாராக வில்லை, தாமதத்திற்கு என்ன காரணம் என்றெல்லாம் துருவி எடுக்க மாட்டார்கள் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடூர குற்றச் சம்பவ வழக்குகளை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அலசி ஆராய்ந்து செய்தி வெளியிட்டால், குறைந்தபட்சம் வழக்கில் நிலவும் முட்டுக்கட்டை களாவது பறந்தோட ஆரம்பிக்கும்.

பெரும்பாலும் பத்திரிகைகளும் மீடியாக்களும் இதனை செய்வது கிடையாது. அதனால்தான் கோவையில் பள்ளிக்குழந்தைகளை வேனில் கடத்திக்கொண்டுபோய் அதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு பிறகு சிறுமியின் சகோதரனையும் சேர்த்து இரட்டை கொலை செய்த மனோகரன் என்பவன், பத்தாண்டுகளுக்கு பிறகும் தூக்கு தண்டனை கைதியாக இன்னும் உயிரோடு இருக்கிறான்.

2010 ஆண்டு அந்த பயங்கரத்தை நிகழ்த்தியவனை நம்முடைய சட்டம் இன்னும் தூக்கில் போட வில்லை. மகளிர் நீதிமன்றம் உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றமெல்லாம் முடிந்து, இப்போது ஆளுநருக்கும் ஜனாதிபதிக்கும் கருணை மனு சமர்க்கும்படலம் மனோகரனுக்கு இன்னும் வாழ்நாளை தரப்போகிறது. கடைசியில் கருணை மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டால் தூக்கும் கிடைக்காது.

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்வோர் சட்டப்படி வெகு வேகமாக தண்டிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து பரவலாக பேசப்படவேண்டும். அந்த பேச்சுக்கள் சமூதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். அவை பொதுமக்களுக்கு நம்பிக்கை தரவேண்டியதாக இருக்கவேண்டும். அதே நேரத்தில் குற்றம் செய்ய முனைபவர்களுக்கு அப்படியொரு பீதியை உண்டாக்க வேண்டும்.

இதற்கு மிகமிக அவசியம், பாலியல் பலாத்கார குற்றங்களை விசாரிக்க, தனி சிறப்பு காவல் படைகள், பிரத்யேக விரைவு நீதிமன்றங்கள். ஒரு வரியில் சொன்னால், பலாத்காரம் செய்தவன், அடுத்த சில மாதங்களிலோ அடுத்த ஆண்டோ உயிரோடு இருக்கவே கூடாது. குற்றம் நிரூபணமானால் தூக்கில்…நிரபராதி என்றால் வெளியில் எதுவாக இருந்தாலும் காலம் நிர்ணயிக்கப்பட்டு நடந்தேறியே ஆகவேண்டும்.

பாலியல் பலாத்கார குற்றங்களை கையாள ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் தொகை, குற்றச்சூழலுக்கு ஏற்ப காவல்துறையில் தனி பிரிவு எற்படுத்தி சிறப்பு படைகளை உருவாக்க வேண்டும். இந்த சிறப்புபடைகளுக்கு தேவையான அளவு ஆலோசனைகளை வழங்க மாநில அளவில், மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள், புலனாய்வு அதிகாரிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்ற ஒரு அமைப்பை உருவாக்கவேண்டும்.

விசாரணை அதிகாரிக்கு ஏதாவது ஒரு சந்தேகமோ தேவையோ வந்து தொடர்பு கொண்டால், மாநில அளவிலான அமைப்பு, உடனே அதை அளிக்கவேண்டும். ஒருசிறப்பு படை புலனாய்வில் இறங்கினால் குற்றம் சாட்டப்படுபவர்கள் உடனடி கைது என்பதுடன் குற்றபத்திரிகையை சில வாரங்களிலேயே நீதிமன்றத்தில் தாக்கல் என்ற நிலை வரவேண்டும்.

அடுத்த கட்டமாக பிரத்யேக விரைவு நீதிமன்றங்கள் வழக்கை தொடர்ச்சியாக விசாரித்து தீர்ப்பை சொல்லவேண்டும். இதுபோன்ற கொடூர வழக்கின் மேல் முறையீடுகளை உயர்நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றங்களும் தனிபெஞ்சை உருவாக்கி வழக்குகளை ஒரு காலக்கெடுவுக்குள் தீர்ப்பை சொல்லவேண்டும்.

இதேபோல கருணை மனுக்கள் மீதும் ஆளுநர் மாளிகை, ஜனாதிபதி மாளிகை ஆகியவை இரண்டும் எவ்வளவு வேகத்தை காட்டமுடியுமோ அவ்வளவு வேகத்தை காட்டவேண்டும். இங்கும் முடிவெடுக்க ஒரு காலக்கெடுவை இனியாவது நிர்ணயிக்கவேண்டும். அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவந்தே ஆகவேண்டும்.

இதெல்லாம் சாத்தியமா என்று கேட்கலாம், செயலில் இறங்கினால் சாத்தியப்படாமல் போகாது.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல்நிலைய எல்லைக்குள் 2016 ஆகஸ்ட் 25 ந்தேதி ஒரு சம்பவம், மனைவியை இளங்குமரன் என்று குடிகார கணவன் கொடூரமாக அடித்துக்கொன்றான். செப்டம்பர் 14ந்தேதி அவனுக்கு மகளிர் நீதிமன்றம் பத்தாண்டு சிறை தண்டனை விதித்தது. கைது, குற்றப்பத்திரிகை தாக்கல், நீதிமன்ற விசாரணை, தீர்ப்பு ஆகிய நான்கு முக்கிய கட்டங்களுக்கும் வெறும் 19 நாட்களுக்குள்.. காவல்துறையும் நீதித்துறையும் இணைந்து நடத்திக்காட்டிய சாதனை அது.

ஆனால் பெரும்பாலும், நடைமுறையில் வழக்கமாய் நடப்பது என்ன? ஒரு பெண்ணுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டவர்களை வேட்டையாடும் போலீஸ் இன்ஸ்பெக்டர், அடுத்த பணியாக அமைச்சர் பந்தோபஸ்த்துக்கு போய்விடுவார். அடுத்தடுத்து வேலைப்பளுவில் அவர் எங்கே சாட்சிகளையும் ஆவணங்களையும் உடனே தயார்படுத்தி குற்றப்பத்திரிகையை தயார் செய்வது?

பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க மத்திய அரசு நிர்பயா நிதி என, மாநிலங்களுக்கு அள்ளிக்கொடுக்கிறது. பேருந்துகளில் சிசிடிவி காமிராக்கள், தெருக்களில் நெருக்கடிகால தொலைபேசி அழைப்பு பெட்டிகள் போன்றவற்றை அமைக்கச்சொல்லி இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் எந்த மாநிலமும் இதை முழுதாக பயன்படுத்துவதே இல்லை.

பலாத்காரங்களின் தலைநகர் என, இழிவான பெருமையை பெற்றிருக்கும் டெல்லியில், 390 கோடி ரூபாய் நிர்பயா நிதியில், மாநில அரசு செலவழித்திருப்பது வெறும் 19 கோடிருபாய்தான்.

நம் தமிழ்நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.. ஒதுக்கப்பட்ட 191 கோடியில் ஆறு கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் மக்களவையே தரும் புள்ளிவிவரம்.

தேசிய குற்ற ஆவணகாப்பகம், என்ன சொல்கிறது தெரியுமா? 2016 ல் சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 533. அடுத்த ஆண்டு நிகழ்ந்தவை 642, அதாவது 109 குற்றங்கள் கூடியிருக்கின்றன. கேட்கவே நன்றாக இல்லை?

ஆனாலும் அரசாங்கம் எதைப்பற்றியும் கண்டுகொள்ளாது, மீடியாக்களும் தெருவில் போகிற வருகிற அரைவேக்காடுகளையெல்லாம், பிடித்துவந்து அவர்களின் பெயருக்கு முன்னால் விதவிதமான அடைமொழிகளை சூட்டி உட்காரவைத்து பத்து பைசாவுக்கு பிரயோஜனம் பெறாத விஷயங்களை விவாதித்துக்கொண்டிருக்கும்.

You may have missed