40 அடி ஆழத்திற்கு மணல் எடுக்கப்பட்டதே மதகுகள் உடைய காரணம்: எடப்பாடி பதவி விலக அன்புமணி வற்புறுத்தல்

சென்னை:

முக்கொம்பு மேலனையின் 9 மதகுகள் உடைய காரணம் மணல் கொள்ளை என்றும், 40 அடி ஆழத்திற்கு மணல் அள்ளியதாலும், தமிழக அரசு சரியாக பராமரிக்காததாலும் மதகுகள் உடைந்துள்ளதாக பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பதவி விலக வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார்.

இதுகுறித்து, அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“திருச்சி முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள மேலணையின் 9 மதகுகள் உடைந்து வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது.  தமிழகத்தின் முக்கிய கட்டமைப்புகளை பராமரிப்பதில் அரசு எந்த அளவுக்கு தோல்வியடைந்துள்ளது என்பதை இது காட்டுகிறது.

182 பழமையான மேலணையும் கல்லணை போலவே பொறியியல் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. இந்த அதிசயம் வெள்ளத்தால் உடைந்தது என்பதை நம்ப முடியவில்லை. மேலணை அதிக காலம் உழைத்து பழமையாகி விட்டதாலும், வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் கூடுதலான தண்ணீர் சென்றதால் ஏற்பட்ட அரிப்பு காரணமாகவும் தான் அணை உடைந்தது.

இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கம் ஆகும்.  மேலணையை பராமரிப்பதில் தமிழக அரசின் தோல்வியையும், மணல் கொள்ளை ஊழலையும் மறைக்கவே இத்தகைய விளக்கம் அளிக்கப்படுகிறது.

முக்கொம்பு மேலணை மிகவும் வலிமை வாய்ந்தது என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் இல்லை. ஒரு வேளை அணை பழுதடைந்திருந்தால் அதுகுறித்து பொதுப்பணித்துறையின் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.  அப்படி எந்த பதிவும் இல்லை.

இத்தகைய சூழலில் இந்த பகுதிகளில் 30 முதல் 40 அடி ஆழத்திற்கு மணல் எடுக்கப்பட்டதால் தான்  மதகுகளின் கீழ் அரிப்பு ஏற்பட்டு அவை உடைந்துள்ளன.  எனவே மேலணையின் மதகுகளும், பாலமும் உடைந்ததற்கு அப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக நடந்துவரும் கண்மூடித்தனமான மணல் கொள்ளையே காரணம் என நான் வெளிப்படையாக குற்றஞ்சாட்டுகிறேன்.

மேலும் தமிழகத்திலுள்ள அனைத்து அணைகள், தடுப்பணைகள், பாலங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் வகையில் அனைத்து ஆறுகளிலும் ஆற்று மணல் எடுக்க தடை விதிக்க வேண்டும். அனைத்து பொதுப்பணித் துறையின் கட்டமைப்புகளும் ஆய்வு செய்ய வேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக மணல் கொள்ளையை ஊக்குவித்து மேலணை உடைந்ததற்கு மறைமுக காரணமாக இருந்த தமிழக முதலமைச்சரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும்” .

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.