சிலி பாலைவனத்தில் கிடைத்த, ஏலியனுடையது என கருதப்பட்ட எலும்புக்கூட்டின்  ரகசியம் தற்போது வெளியாகி இருக்கிறது.

சிலி அட்டகாமா பாலைவனத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 6 இன்ச் அளவிலான, முழுதாக வளர்ந்த மனித உருவத்தை போலவே இருந்த எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.  அது ‘ஏலியன்’ எனப்படும் வேற்றுக்கிரகவாசியினுடையது என்றும், மேலும் பல மர்மத் தகவல்களும் அதைப் பற்றி வெளிவந்தன.

இந்நிலையில், அந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த எலும்புக்கூடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், அது மனிதனின் டி.என்.ஏ.யை கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உருவத்தில், தாயின் கருவின் அளவையும், எலும்பு வளர்ச்சியில் ஆறு வயதுக் குழந்தையின் அளவையும் கொண்ட இந்த எலும்புக்கூட்டுக்கு ‘அட்டா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த எலும்புக்கூட்டின் தலை, வேற்றுக்கிரகவாசியின் தலையைப் போல கூர்மையான வடிவிலும், பத்து விலா எலும்புகள் எனப் பல குறைபாடுகளுடனும் இருந்தது குழப்பத்தை உருவாக்கியது.

இந்நிலையில், இது எலும்பு வளர்ச்சிக் குறைபாட்டினால் ஏற்பட்டது எனவும், சாதாரண மனிதக் குழந்தையான இது, இறந்து பிறந்தோ அல்லது பிறந்தவுடன் இறந்தோ இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.