அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் மீது 300பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
சென்னை:
சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மாற்றுத்திறனாளியான 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேர் மீது காவல்துறையினர் 300 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அயனாவரம் சயானி அருகே அமைந்துள்ள பிரபலமான உயர்தர வகுப்பினர் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை அந்த குடியிருப்பின் காவலாளிகள், லிப்ட் ஆபரேட்டர், தண்ணீர் கேன் போடுபவர், பிளம்பர், எலக்ட்ரீசியன் உள்பட 17 பேர் பாலியல் பலாத்காரம் செய்த விவரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது அவர்கள் மீது காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு காரணமாக கைது செய்யப்பட்ட 17பேருக்கும் தனித்தனியாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட் டிருந்தது. மேலும், சிறையில் பாதிக்கப்பட்ட சிறுமி மூலம் அடையாள அணிவகுப்பும் நடத்தப்பட்டது. மேலும், வழக்கை விரைவாக முடிக்கும் வகையில் சிறப்பு வழக்கறிஞரும் நியமிக்கப்பட்டிருந்தனர். அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 17 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
இதை அடுத்து 17 பேரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த 17 பேருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனித்தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது. சிறுமி முன்னிலையில் சிறையில் அடையாள அணிவகுப்பும் நடத்தப்பட்டது. வழக்கை விரைவுபடுத்துவதற்காக அரசு சிறப்பு வழக்கறிஞரும் நியமிக்கப்பட்டார்.
17 பேர் ஜாமினில் செல்வதை தடுப்பதற்காக குண்டர் சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.
ஒரு வழக்கில் 90 நாட்களில் காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாவிட்டால் கைதிகள் ஜாமினில் செல்ல வழி வகை உண்டு என்ற நிலையில், காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு 2 மாதங்களுக்குள்ளாகவே அயனாவரம் மகளிர் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுபோல ஒவ்வொரு வழக்கிலும் காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி உடனடியாக தண்டனை பெற்றுக்கொடுத்தால் நாட்டில் குற்றச்சம்பவங்களே நடைபெறாது…