திராவிட கட்சிகளின் “துண்டு” அரசியலும் அதன் சமுதாய மாற்றமும்- ஒரு அலசல் !

சிறப்புக்கட்டுரை: ராஜ்குமார் மாதவன்

மிழர் கலாச்சாரத்தில் “துண்டு” ஒரு இன்றியமையாத குறியீடு, அடையாளம். தமிழர் தலைவர்களான பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், எம்ஜிஆர், மதியழகன், நாஞ்சில் மனோகரன், வைகோ, ஆற்காடு வீராசாமி ஏன்று நம் நினைவில் வரும் அனைவரும் துண்டோடு மிடுக்காக அரசியல் மேடைகளில் பவனி வந்தது நினைவில் வரும்.

இன்றைய சமுதாயத்தினர்க்கு “துண்டு” பற்றிய முக்கியத்துவமும் அடையாளமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வாய்ப்பிருந்தால் அவர்கள் இல்லங்களில் இருக்கும் குறைந்தது அம்பது ஆண்டுகளுக்கு முந்தய புகைப்படங்களை தேடி பாருங்கள், அனைத்து ஆடவரும் “துண்டோடு” இருப்பார். துண்டை, இடுப்பில் கட்டுவதும், அக்கத்தில் வைப்பதும், தோளில் போடுவதும், தலையில் உருமாவாக கட்டுவதும், அவர்களுடைய சாதி சம்பிரதாயங்களின்படியும், நிகழ்ச்சிகளின்படியும் என்பதை இன்று உள்ளோர் அறிவது கடினமே.

திராவிட இயக்கங்கள் சுயமரியாதைக்காக துவங்கப்பட்ட துவக்ககாலங்களில், துண்டு , மிக பெரிய அடையாளமாக இருந்தது. உயர் சாதிய தெருக்களில் துண்டை கக்கத்தில் வைத்து நடந்த காலம். சட்டை அணியாமல் கடைத்தெருவுக்கு வருவோரும், துண்டு இல்லாமல் வருவது இல்லை. துண்டின் ஊடாக தங்களின் உரிமை மற்றும் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தினார்கள். தங்களை விட மேல் சாதியினரை சந்திக்கும் போது துண்டுகள் தோளில் இருப்பதில்லை. சாதிய மரியாதை நிமித்தமாக தோளில் இருந்த துண்டுகள் இடுப்புக்கோ, அக்கத்துக்கோ வந்துவிடும். ஊர் கூட்டங்களில், தலைவர்கள் மட்டுமே துண்டை தலையில் உருமாவாக கட்டி அமருவார்கள். அவர்கள் உடுத்தும் துண்டும் அவர்களுடைய பொருளாதார நிலையை குறிக்கும் வகையில் இருக்கும். சுருங்கச்சொன்னால், அன்றைய காலகட்டத்தில், துண்டு ஒரு சாதிய மற்றும் பொருளாதார குறியீடு.

அக்காலகட்டத்தில், திராவிட இயக்கங்கள், தமது அரசியல் மேடைகளில், சாதிய பேதமின்றி மேடையில் இருக்கும் அனைத்து தலைவர்களுக்கும் “பொன்னாடை” போர்த்துவதாக தோளில் துண்டு அணிவித்தார்கள். அந்த இயக்கங்களில் இருந்த சிறு தலைவர்கள் கூட சாதிய, பொருளாதார பேதமின்றி நீளமான துண்டுகளை அணிந்தார்கள். இது, அன்றைய காலங்களில் பெரும் எதிர்ப்புகளை சந்தித்தது. ஆனால், அன்றைய காலகட்டத்தில் உயர் சாதியரின் இயக்கமாக இருந்த காங்கிரஸ் போன்ற இயக்கங்களுக்கு மாற்றாக பெரும் புரட்சிகர கருத்தாக “சால்வை” அணிவித்தல் நிகழ்வுகள் மேடை தோறும் நிகழ்த்தினார்கள். அவர்கள் அணிவித்த சால்வைகள், சமணியனையும் துண்டை தோளில் அணிய செய்தது. யாருக்காகவும், அவர்களின் துண்டு அக்கத்திற்கு வரவில்லை. சால்வை அணிவித்ததை குறித்து திராவிட இயக்கங்கள் எந்த மேடைகளிலும் அன்றைய தேதிகளில் விளம்பரப்படுத்தவில்லை. அதைக்குறித்தான, மேலதிக விவாதங்களை கிளப்பி அன்று கலவரங்களுக்கு வித்திடவில்லை, மாறாக ஒரு மௌன புரட்சியாக ஒரு மிகப்பெரிய சமுதாய மாற்றத்தை, தனிமனித சுயமரியாதையை நிலைநாட்டினார்கள். குப்பனும், சுப்பனும், துண்டு அணியத்துடங்கினார்கள். மேடைகளில், சாதிய பேதமின்றி சமுதாயத்தில் உள்ள கீழ்த்தட்டு மக்களுக்கும் உயர் சமூகத்தினர் சால்வை அணிவித்தார்கள். அறிஞர் அண்ணா, கலைஞர் , வைகோ போன்றோர் அணிந்த துண்டுகள் கீழ்த்தட்டு தொண்டனையும் வசீகரித்து அவர்களும் வண்ணவண்ண துண்டுகள் அணிந்தார்கள்.

அதன் தாக்கமாக, காலப்போக்கில், துண்டு கொண்டிருந்த சாதிய சம்பிரதாய மகத்துவம் குறைந்தது. அதன், சமுதாய தாக்கம் மெல்ல குறைந்தது. இன்று சமுதாயத்தினர் துண்டு இன்றி வீட்டிற்கு வெளியே வருகிறோம். நமது சம்பர்தாய நிகழ்வுகள் தவிர்த்து நாம் துண்டு அணிவதில்லை. ஆனால், துண்டுகளை பார்க்கும் போதெல்லாம், திராவிட இயக்கங்கள், தனி மனித சுய மரியாதை காப்பதற்காக நிகழ்த்திய மிக பெரிய சமுதாய மௌன புரட்சி “சால்வை” அணிவித்தல் என்பதை நினைவு கூற தோன்றும்.

திராவிட இயக்கங்கள், நிகழ்த்திய சமுதாய மாற்றங்கள் சொல்லி மாளாது. ஆனால், அவர்கள் நிகழ்த்திய “துண்டு” அரசியல் அவர்களின் சமுதாய சீர்திருத்தங்கள் மற்றும் மறுமலர்ச்சியின் மைய புள்ளி என்றால் அது மிகையாகாது. எப்படி, நமது பெயருக்கு பின்னால் சாதிய குறியீட்டை திராவிட இயக்கம் அழித்ததோ அதை போன்று சாதிய பொருளாதார குறியீடாக இருந்த துண்டையும் தமிழ் சமூகத்தில் இருந்து அகற்றினார்கள். இன்று சாதிய பேதமின்றி தோளில் துண்டு போடும் அனைவரும் திராவிட இயக்கங்கள் வெளிச்சொல்லாமல் நிகழ்த்திய சுயமரியாதை சமரை மனதார வாழ்த்துவோமாக.