கோவை:

கோவையில் பணிபுரிந்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் சுமார் 1140 பேர், சிறப்பு ரயில் மூலம் பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஊரடங்கு காரணமாக பணியிடங்களில் சிக்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கு ஏற்ப கடந்த மே 1ம் தேதியிலிருந்து சிறப்பு ரயில்களுக்கு உத்தரவிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். இப்பணியில் 115 சிறப்பு ரயில்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான டிக்கெட் செலவை அந்தந்த மாநிலங்கள் பயணிகளிடம் வசூலித்து ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இதற்காக பரவலாக எதிர்ப்பு உருவானது.

நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ”வெளிநாட்டில் சிக்கியிருக்கும் நம்முடைய குடிமக்களுக்காக இலவசமாக விமானப் பயணத்தை ஏற்பாடு செய்கிறது மத்திய அரசு. குஜராத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கான போக்குவரத்திற்காகவும் உணவிற்காகவும் 100 கோடி ரூபாய் செலவிடப்படும்போது பிரதமரின் கரோனா நிதிக்காக ரயில்வே அமைச்சகம் 151 கோடி ரூபாயை தானமாக அளிக்கும்போது, தொழிலாளர்களுக்காக இலவச ரயில் போக்குவரத்தை அளிக்க முடியாதா?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

ஆனால் இவரது கேள்விக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து எந்தபதிலும் வராத நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பயணச்செலவை காங்கிரஸ் ஏற்கும் என்றும் சோனியா காந்தி அறிவித்தார்.

இந்நிலையில் கோவையில் பணிபுரிந்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் சுமார் 1140 பேர், சிறப்பு ரயில் மூலம் பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கோயம்புத்தூரிலிருந்து நேற்று இரவு 8.20 மணிக்கு கிளம்பிய இந்த ரயிலில் ஏறி பயணிகளுக்கு வெப்பமாக பரிசோதித்தல் சோதனை நடத்த்ப்பட்டது. பின்னர் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர்.