வைரமுத்துவின் மௌனம் தமிழர்களை அவமானப்படுத்துகிறது!: சுபவீ

சுபவீ – வைரமுத்து

“வைரமுத்துவின் மௌனம் தமிழர்களை அவமானப்படுத்துகிறது” என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள், தேவதாசி என ஆங்கில ஆறிஞர் ஒருவர் எழுதியதை தனது கட்டுரை ஒன்றில் வைரமுத்து பதிவு செய்திருந்தார். இதையடுத்து இந்துத்துவவாதிகள், வைரமுத்துவை மிக்க் கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து வைரமுத்து மன்னிப்பு கேட்டார். பிறகு அது குறித்து அவர் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில்   “வைரமுத்துவின் மௌனம் தமிழர்களை அவமானப்படுத்துகிறது” என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும், “கவிஞர் வைரமுத்துவின் மீது மலையைத் தூக்கி எறிகின்றனர். அவரும் மெளனமாய் இருக்கிறார். கூட்டத்தை ஏற்பாடு செய்த வைத்தியநாத அய்யர் மீது மணல் கல் கூட விழவில்லை. ஏன்? இது இந்து மதம் காக்கும் போர் அன்று. பார்ப்பனக் கூட்டம் நம் மீது தொடுக்கும் போர்.

ஹெச்.ராஜாவின் தரங்கெட்ட பேச்சைப் போலவே, வைரமுத்துவின் மௌனமும் தமிழர்களை அவமானப்படுத்துகிறது. நடிகர் விவேக்கின் சமரசம் வெட்கக்கேடானது. பாரதிராஜாவின் உரை பாராட்டிற்குரியது!

விருதுகளைத் தூக்கி எறிந்து விட்டு வெளியே வாருங்கள் கவிப்பேரரசு அவர்களே! காக்காய் போல நீங்கள் கறுப்பு என்கிறார் ஒரு பட்டர். நெருப்பைப் போல நீங்கள் சிவப்பு என்பதை நிரூபிக்கும் நேரம் வந்து விட்டது. பாஜக தலைவர்களைப் பாராட்டப் பிறந்ததன்று உங்கள் தமிழ்” என்றும் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி