முரளி நடித்த வாட்டாக்குடி இரணியன் என்ற திரைப்படத்தை கிட்டதட்ட அனைவரும் அறிந்திருப் போம். அது ஒரு உண்மைக்கதை.  வாட்டாக்குடி இரணியன் என்ற பெயரில் ரத்தமும் சதையுமாக உலவிய ஒரு போராளியின் வாழ்க்கை அது.

அந்த நிஜப்போராளி வாட்டாக்குடி இரணியனின் பிறந்த நாள் (நவம்பர் 15)  இன்று.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வாட்டாக்குடி கிராமத்தில் இராமலிங்கம் – தையல் அம்மாள் தம்பதிக்கு  1920 நவம்பர் 15 அன்று வெங்கடாச்சலம் என்ற இயற்பெயரோடு பிறந்தவர்  வாட்டாக்குடி இரணியன்.

குடும்ப வறுமை காரணமாக, தனது 13 வது வயதில் உறவினர்களுடன் சிங்கப்பூர் சென்று வேலைபார்த்தார் வெங்கடாச்சலம். அங்கு ஆங்கிலேயர்கள், சீனர்கள்,மலேசியர்களின் தோட்டங்களில் தமிழர்கள் அடிமைகளாக உழன்றதைக் கண்டு கொதித்துப்போனார்.

அந்த காலகட்டத்தில்தான் பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள் மலேயா கணபதி, வீரசேனன் ஆகியோருடன் வெங்கடாச்சலத்துக்குத் தொடர்பு  ஏற்பட்டது. பொதுவுடைமை மீதான பிடிப்பு ஏற்பட்டது.

இரகசிய அரசியல் கூட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்புக்கிட்டியது. சிங்கப்பூரில் பொதுவுடைமை மற்றும் பகுத்தறிவு சிந்தனையை வளர்த்துக் கொண்ட வெங்கடாச்சலம்,  “இரணியன்”  என்று தனது பெயரை  மாற்றிக்கொண்டார்.

1943ல் சிங்கப்பூர் வந்த நேதாஜியைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றார் இரணியன். நேதாஜி அமைத்த இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தார். அவரது துடிப்பான செயல்களும், திட்டமிடும் அறிவாற்றலும் அவரை படைக்கு பயிற்சியாளராக உயர்த்தியது.

பிறகு சிங்கப்பூர் துறைமுக தொழிற்சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றார். முழுமையான பொதுவுடமை வாதியாக அவரை மாற்றுகிறது அந்த சூழல்.

மலேசியாவில் தொழிலாளர் ஒடுக்குமுறைக்கு எதிராக “இளைஞர் தற்கொலைப் படை” ஒன்றை நிறுவி, இளைஞர்களுக்கு கொரில்லா பயிற்சியும் துப்பாக்கிச்சுடும் பயிற்சியும் அளித்து பல போராளிகளை உருவாக்கினார்.

பிறகு நாடு திரும்பிய இரணியன் தனது சொந்த ஊருக்க வந்தார்.  ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் ஆண்டான் அடிமை ஆதிக்க போக்கு வேரூண்றியது. மக்கள் சொல்லனா துன்பத்தில் உழன்று கிடந்தனர்.

அவர்களை மீட்க, பெரும் ஜமீன்களை எதிர்த்துப் போராட்டத்தைத் துவக்கினார்.

அன்றைக்கே எதிர்த்து கம்யூனிசத்தை வளர்த்தெடுக்க பெரும்பங்காற்றினார். காவிரிப் படுகை பகுதியில் ஜமீன்தாரி/பண்ணை அடிமை ஒழிப்பை கொண்டுவந்து அப்பாவி பட்டியல் சாதி மக்களை காத்ததாலும், விவசாயிகளின், தொழிலாளர்களின் உரிமைக்காகப் பாடுபட்டார். அதனால் அவரது சாதியைச் சேர்ந்த நிலவுடமையாளர்களும் ஜமீன்களுமே இரணியனை எதிரியாக நோக்கினார்கள்.

ஒரு கட்டத்தில் தலைமறைவாக இருந்து போராட்டங்களை நடத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக வடசேரி சவுக்கு தோப்பில் பட்டாமணியம் சம்பந்தமூர்த்தி என்பவரால், 05.05.1950 அன்று காட்டிக்கொடுக்கப்பட்டார். காவல்துற தனது துப்பாக்கிக் குண்டுகளை இரணியனின் மார்பில் பாய்ச்சின.

“புரட்சி ஓங்குக! செங்கொடி வாழ்க!” என முழக்கமிட்டு மண்ணில் சாய்ந்தார் இரணியன். அப்போது அவருக்கு வயது 30தான்.

வாட்டக்குடி இரணியனோடு இணைந்து செயல்பட்ட ஜாம்பனோடை சிவராமனும் கொல்லப்பட்டார். இவரும் வாட்டாக்குடி இரணியனின் உறவினர்தான்.

ஆனால் இவர்கள் சாதி மதம் மறுத்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடி உயிர் நீத்தார்கள்.