சபரிமலையின் சிறப்பு

சபரிமலையின் சிறப்பு

சபரிமலையில் உள்ள சிறப்புக்கள் குறித்த நெட்டிசன் பதிவு


சபரிமலை யாத்திரை பொழுது போக்கிற்காகவும், கண்டு களிப்பதற்காகச் சென்று வரும் சுற்றுலா அல்ல என்பதை ஒவ்வொரு ஐயப்பன்மார்களும் உணர வேண்டும். மாலை போட்டுக் கொள்ளும் ஐயப்பன்மார்கள் தாங்களாக விரும்பி வந்து விரதத்தை மேற்கொள்ளுகிறார்கள். யாருடைய கட்டாயத்தின் பேரிலும் இதை மேற்கொள்ளுவதில்லை. ஆதலால் ஐயப்பன்மார்கள் விரதத்திற்குப் பங்கம் ஏற்படா வண்ணம், இவ்விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

சாதாரணமாக உள்ள மற்ற ஸ்தலங்களை விட அதிகமான சிறப்புகள் பொருத்தங்கள் சபரிமலைக்கு உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் ஏதாவது ஏழு பொருத்தங்களில் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.

1. சுயம்பு லிங்க பூமி-சுயமாக உண்டானதோ அல்லது  இறைவனுடைய ஜீயோதிர்லிங்கம் உள்ளவை

2. யாக பூமி – மகா யாகம் நடந்த ஸ்தலம்

3. பலி பூமி-பக்தி மார்க்க யுத்தம் நடந்த இடம்

4. யோக பூமி-ரிஷியின் தவமிருந்த ஸ்தலம்

5. தபோ பூமி-யோகிமார் வாழ்ந்த ஸ்தலம்

6. தேவ பூமி – தேவர்களால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட பூமி

7. சங்கம பூமி – நதி சங்கமிக்கும் ஸ்தலம்

இந்த ஏழில் ஏதாவது ஒன்று இருந்தாலும் அது தீர்த்த பூமியாகும். இத்தகைய இடத்திற்குப் போவதாலும் தரிசனம் செய்வதாலும் ஒரு ஜீவாத்மாவினுடைய அனைத்துப் பாவங்கள் நீங்கி கோடிப்புண்ணியம் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. சபரிமலை மேற்கண்ட ஏழு அம்சங்களையும் பொருந்தியுள்ளதால் சபரிமலை வருபவர்களுக்கும் ஐயப்பனைத் தரிசிப்பவர்களுக்கும் கோடிப் புண்ணியம் கிடைக்கிறது. அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி மோட்சமடையத் தகுதி பெறுகிறார்கள்.

சபரிமலை போன்று பூஜிக்கத் தக்க 18 படிகளுடன் மலை மீது , உலகத்தில் எந்த ஆலயமும் இல்லை.

மண்டல விரத அனுஷ்டானங்களுடன் இருமுடியுடன் தரிசனம் செல்வது சபரிமலைக்கு மட்டும்தான்.

எல்லா பக்தரையும் ஸ்வாமிகளாகப் பார்த்து வணங்குவது சபரி யாத்திரை காலத்தில்தான்.

எங்கும் அன்னதானம் , சரணகோஷம், ஜாதி பேதமின்மை சபரி மலையில் மட்டும்தான்.

புனிதயாத்திரை செல்வதில் தனித்தன்மை மிக்கதாகச் சபரிமலை பயணம் அமைந்துள்ளது. 41நாட்கள் பக்தர்கள் விரதமிருந்து மனதாலும், உடலாலும் தூய்மை காக்கின்றனர்.
கற்கள் நிறைந்த காட்டுப்பாதையில் குளிர்காலத்தில் மலையேறிச் செல்ல வேண்டி இருப்பதால், உடல் வலிமை தேவையானதாக உள்ளது.

எனவே பிரம்மச்சரியம் அனுஷ்டிக்கின்றனர். ஆடம்பரம் இன்றி அனைத்து பக்தர்களும் சரிசமமாக நீலம், கருப்பு காவி உடையில் சமத்துவத்தை வளர்க்கின்றனர்.

வழக்கமான நடைமுறை வாழ்வில் இருந்து விலகி, ஆறு,மலை என்று இயற்கையான சூழலில் மலையேறி, உற்சாகம் பெறுகின்றனர்.

இதுவே, சபரிமலை யாத்திரையின் தனித்தன்மை.

இப்பூவுலகிலேயே பக்தி உணர்ச்சி தழைத்தோங்கி தூய உள்ளத்துடன், உலக மாயை அகற்றி, உள்ளம் தெளிவாக்கி பற்றற்ற பரந்த மனப்பான்மையோடு பக்தர் வெள்ளம் பயபக்தியுடனும், பரவசத்துடனும் பயணம் தொடர்கின்ற புனித யாத்திரை சபரி யாத்திரை என்பதனை உலகம் அறியும்.

பல்லாண்டுகளாகப் பெரியோர் பலரால் போற்றி காப்பாற்றப்பட்டு வரும் பயண, விரத விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் இக்காலத்தில் சபரி யாத்திரை செல்லும் இளம் தலைமுறையினர் உறுதியுடனும், உள்ளத்தெளிவுடனும், ஒழுங்குடன் பின்பற்றி சபரி யாத்திரையின் புனிதத் தன்மையை மாசின்றி நிலை நிறுத்த வேண்டியது கடமையாகும்.

கலியுக வரதனே சரணம் அய்யப்பா !

கார்ட்டூன் கேலரி