ஜி.எஸ்.டி.யால் மாநில உரிமை பறிக்கப்பட்டுள்ளது! தம்பிதுரை ஓலம்!!

சென்னை,

ஜி.எஸ்.டி.யால் மாநில உரிமை பறிக்கப்பட்டது உண்மை தான், அதிமுக எம்.பியும், பாராளுமன்ற துணைசபாநாயகருமான  தம்பிதுரை பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

இது மோடி அரசுக்கு எதிரான கருத்து என்பதால், அரசியல் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ஜி.எஸ்.டி.யால் மாநில உரிமை பறிக்கப்பட்டது உண்மை தான் என்று கூறியுள்ளார்.

அதிமுக அரசு தமிழகத்தில்  ஜனநாயக முறையில்தான்  ஆட்சி செய்கிறது என்றும்,  கட்சியை அமைச்சர்கள் சிறப்பாக வழி நடத்திச் செல்கிறார்கள், இந்த ஆட்சி தொடர்ந்து 5 ஆண்டுகள் நீடிக்கும் என்றும், இதை ஒரு போதும் யாராலும் அசைக்கமுடியாது என்றும் அவர் கூறினார்.

ஸ்டாலின் எப்படியாவது முதலமைச்சராகிவிட வேண்டும் என துடிக்கிறார், ஆனால் ஒரு போதும் அவரது கனவு பலிக்காது என்றும், திமுகவில்தான் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது என்று குறை கூறினார்.

மேலும்  அதிமுகவில் குடும்ப அரசியலை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு போதும் அனுமதித்ததில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் பா.ஜ.க ஜனாதிபதி வேட்பாளர் ராமநாத் கோவிந்த் நல்லவர் என்ற அடிப்படையிலேயே ஆதரவு அளித்துள்ளதாக தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டியால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் அதிமுக எம்பிக்கள் அதற்கு எதிராக நாடாளு மன்றத்தில் குரல் கொடுப்போம் என்றும்,  ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டதால் மாநிலங்களின் உரிமை பறிபோவதாகவும், மாநில அரசுகளுக்கு வர வேண்டிய  வருவாய் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மோடி அரசுக்கு எதிராக அதிரடியாக கூறினார்.

ஜிஎஸ்டி, உதய்  போன்ற மத்தியஅரசின் பெரும்பாலான திட்டங்களுக்கு அனுமதி அளிக்காமல் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்,

தற்போதைய எடப்பாடி தலைமையிலான  அரசு, மத்திய அரசின் மிரட்டலுக்கு பணிந்து அனைத்து விதமான மத்திய அரசின் திட்டங்களுக்கும் அனுமதி அளித்துவிட்டு, இன்று மத்தியஅரசு மாநில அரசின்  உரிமையை பறிக்கிறது என்று தம்பிதுரை ஊழையிடுவது கேலிக்கூத்தானது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.