இன்றைக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் தும்பாவில் அமைந்த விக்ரம் சாராபாய் வானியல் ஆராய்ச்சி மையத்தின் பின்னால், அந்த இடத்தினுடைய உண்மையான கதை மறைந்துள்ளது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதிய சுயசரிதையான ‘அக்னி சிறகுகள்’ என்ற புத்தகத்தில் இதுதொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது என்ன என்பதைப் பார்ப்போமா?

தும்பா என்பது ஒரு சிறிய மீனவ கிராமம். திருவனந்தபுரம் நகரத்தின் ஒதுக்குப்புறமாக அமைந்திருந்தது. ஆனால், அந்த இடம் ஒரு அபூர்வமான இடம். பூமியின் காந்த மையக்கோட்டிற்கு மிக அருகே அமைந்திருந்தது அந்த கிராமம். தும்பா கிராமத்தில் வானியல் ஆராய்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்ட இடம், கடற்கரைக்கும் ரயில்வே லைனுக்கும் இடையிலுள்ள 2.5 கி.மீ நீளமுள்ள இடம். அதன் மொத்தப் பரப்பு 600 ஏக்கர்கள்.

அந்த இடத்தில் ஒரு பெரிய தேவாலயம் கட்டப்பட்டிருந்தது. அந்த இடம் எங்களுக்குத் தேவையாக இருந்தது. எனவே, விக்ரம் சாராபாய், பாதிரியார் பீட்டர் பெர்னார்ட் பெரைராவை சந்தித்தார். அவரும், அந்த இடத்தை தருவதற்கு தயாராக இருந்தார்.

பணி வாய்ப்புகள் வழங்கப்படுவதாக கிடைத்த உத்தரவாதத்தால், அக்கிராமத்தில் வாழ்ந்துவந்த மீனவ மக்களும் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தார்கள். அந்த தேவாலயத்தில்தான், Thumba Equatorial Rocket Launch Station(TERLS) என்பதன் முதல் யூனிட் நிறுவப்பட்டது.

அந்த தேவாலயத்தின் பிரார்த்தனை அறைதான் எனது முதல் ஆய்வகம். பிஷப்பின் அறைதான் எனக்கான வடிவமைப்பு மற்றும் வரைபட அறையாக பயன்பட்டது. மேலும், பிஷப் தங்கியிருந்த சிறிய வீட்டினுடைய ஒரு அறைதான் எனது அலுவலகமாக இருந்தது. அதற்கான சில அடிப்படையான வசதிகள் அந்த அறையில் ஏற்கனவே இருந்தன. இவ்வாறு பல விஷயங்கள் பகிரப்பட்டுள்ளது அந்தப் புத்தகத்தில்..!

தான் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகும், அந்த அறைக்கு சென்று பார்வையிட்டார் கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.