காவிரி: தமிழகம் முழுதும் போராட்டம்! மோடி உருவ பொம்மைகள் எரிப்பு!

சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆரம்பத்தில் இதற்கு ஒப்புக்கொண்ட மத்திய அரசு பிறகு மறுத்துவிட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுவும் அளித்துள்ளது.

c07d313fd965c033da8418b85112b5b2_l

கர்நாடகாவுக்கு ஆதரவான இச் செயல், தமிழகத்துக்கு எதிரானது என்று, விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், மத்திய  பா.ஜ.க. அரசுக்கு எதிராக தமிழகம் முழுதும் போராட்டம் வெடித்துள்ளது.

கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காந்திபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் எதிரில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை இன்று காலை எரித்தனர். அப்போது, மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதே போல திருத்துறைப்பூண்டியிலும் மோடியின் உருவபொம்மையை விவசாயிகள் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, நாகை மாவட்ட விவசாயிகள் கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தைச் சேர்ந்தவர்கள், நேற்று சென்னை தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகில் , க. அருணபாரதி தலைமையிலும்,  தஞ்சை மாவட்டம்,  குடந்தை  உச்சிப்பிள்ளையார் கோயில் அருகில் க. விடுதலைச்சுடர் தலைமையிலும், தஞ்சையில், தொடர்வண்டி நிலையம் முன்பு, அய்யனாவரம் சி. முருகேசன் தலைமையிலும் மோடியின் உருவபொம்மையை எரித்தனர். இவர்கள் பிறகு கைது செய்யப்பட்டனர்.