புதுடெல்லி:

வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதிலும் இருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் பிரமாண்டமாகத் திரண்டு, நாட்டின் 62 கோடி விவசாயிகளின் சார்பில், பல லட்சம் விவசாயப் பெருமக்கள் கடந்த நான்கு நாட்களாக டெல்லி மாநகரத்தை ஜனநாயக வழிமுறைகளையொட்டி முற்றுகையிட்டுள்ளனர். மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை முன்வைத்துச் சளைக்காத தீரத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வாரணாசி சென்ற பிரதமர் மோடி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது தொடர்பாக வாய் திறக்கவில்லை பிரதமர் மோடி. ஆனால், “வேளாண் சட்டங்கள் மூலம், இடைத்தரகர்களிடம் இருந்து விவசாயிகளைப் பாதுகாத்து, விளைபொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கச் செய்வதே நோக்கம். வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளை எதிர்க்கட்சிகள் திசை திருப்பி வருகின்றன. வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியவை” என்று பேசியுள்ளார்.

மோடி போராட்டம் குறித்து பேசாத நிலையில், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடரவுள்ளதாக அறிவித்துள்ளனர். “நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை என்றால்மட்டுமே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். நிபந்தனைகள் விதித்தால் எங்கள் போராட்டம் தொடரும்” என்று அறிவித்துள்ளனர்.