3ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய தென்கொரிய கப்பல் மீட்பு!

சியோல்,

தென்கொரியா அருகே நடுக்கடலில் மூழ்கிய பயணிகள் கப்பல் 3 ஆண்டுக்கு பின் மீட்கப்பட்டது. அதில் இருந்த இறந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன.

கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் 16ந்தேதி  சியோல் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட அந்த கப்பல்  அதிக அளவு பாரம் ஏற்றியதன் காரணமாகவும், கடல் சீற்றம் ஏற்பட்டதாலும் நடுக்கடலில் மூழ்கியது.

தென்கொரியா ஜிண்டோ கடற்கரைக்கு தென்கிழக்கு தீவு அருகே மஞ்சள் கடலில் மூழ்கிவிட்டது. சுமார் 130அடி ஆழத்தில் கப்பல் மூழ்கியதால் அதில் உள்ள பயணிகளை மீட்க முடியாமல் இருந்தது.

கப்பலை மீட்க தென்கொரிய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கப்பல் மீட்கப்பட்டுள்ளது.

 

அந்த கப்பலில் 987 டன் சரக்கு மட்டுமே ஏற்றுவதற்கான தகுதி பெற்றது. ஆனால் கப்பல் நிர்வாகம்  3608 டன் அளவு எடையுள்ள சரக்குகளை ஏற்றி சென்றதால், பாரம் தாங்காமல் கடலில் மூழ்கிய தாக கூறப்படுகிறது..

மொத்தம் 476 பேர் பயணம் செய்த அந்த கப்பல், கடலில் மூழ்க்கியதை தொடர்ந்து 304 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். 175 பயணிகள்  மட்டுமே உயிருடன்  மீட்கப்பட்டனர்.

அதிக எடை கொண்ட கப்பலை பத்திரமாக மீட்க கடந்த 3 ஆண்டுகளாக பணி நடைபெற்ற நிலையில், 130 அடி ஆழத்தில் இருந்த கப்பல், கடலின் மேற்பரப்புக்கு கொண்டுவரப்பட்டது.

அதில் இருந்த பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 295 உடல்களை மீட்ட மீட்புக்குழுவினர், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் 9 பேரின் உடல்களை கப்பலுக்குள் தேடும் பணி நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கப்பல் விபத்து காரணமாக கப்பல் கேப்டன் லீஜுன் சிக்குக்கு ஆயுள் தண்டனையும், மேலும் கப்பல் ஊழியர்கள் 14 பேருக்கு 12 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.