டில்லி,

நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய மீண்டும்  உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சிறப்பு அமர்வு வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முடியாது என்று கூறி 4வது முறையாக உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளான கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை நடத்த உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.

ஆனால், நீதிபதி கர்ணன் அதற்கு மறுப்பு தெரிவித்தார். தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபகளை கைது செய்ய வேண்டும் என்றும், அவர்கள் வெளிநாடு செல்ல  தடை விதித்தும் அலம்பல் உத்தரவுகளை பிறப்பித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதையடுத்து, கோபமடைநத உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

அதைத்தொடர்ந்து நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் முயன்றனர். ஆனால், அவர் அங்கிருந்து தப்பி சென்னை வந்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் சென்னைக்கு வந்த கொல்கத்தா மற்றும் தமிழக போலீசார் இதுவரை கர்ணனை கைது செய்ய முடியவில்லை.

அவர் எங்கே இருக்கிறார் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் இரு மாநில போலீசாரும் தேடி வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனையை எதிர்த்து நீதிபதி கர்ணன் மனு அளித்திருந்தார்.

ஏற்கனவே 3 முறை அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், இன்று 4வது முறையாக அவரது தண்டனையை ரத்து செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

ஏற்கனவே, “என் தந்தை கர்ணன் சரணடைய மாட்டார்’’ என நீதிபதி கர்ணனின் மகன் சுகன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.