sc_9
எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்பிற்கான  பொது நுழைவுத்தேர்வு இந்த ஆண்டும்  நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான  மாணவர் சேர்க்கைக்காக, நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேசிய தகுதி நுழைவுத்தேர்வை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, கடந்த 11-ம் தேதி உத்தரவு இட்டது.
இதை எதிர்த்து தமிழகம், உத்தரபிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி கூட்டமைப்புகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவற்றை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் மாநில அரசுகளும், தனியார் மருத்துவ கல்லூரிகளும் தனித்தனியே நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி கோரி வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பில், “  எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு முதலே, தேசிய தகுதி நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே நடத்தப்பட வேண்டும்” என உச்சநீதிமன்றம்  கூறியுள்ளது.
மேலும், “மாநில அரசுகள் தனியாக நுழைவுத் தேர்வை நடத்த முடியாது.  தேசிய தகுதி நுழைவுத் தேர்வு தொடர்பான மத்திய அரசின் அதிகாரம், தனி நுழைவுத் தேர்வு தொடர்பான மாநில அரசுகளின் சட்டங்களைவிட மேலானது”  என்று தீர்ப்பில் கூறப்பட்டது.