Random image

வரதட்சனை கொடுமை: புகார் செய்தவுடன் கைது செய்யலாம்: உச்சநீதி மன்றம்

டில்லி:

வரதட்சனை கொடுமை என புகார் கொடுத்தவுடன் சம்மந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யலாம் என்று  உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் வரதட்சனை தொடர்பாக ஏராளமான புகார்கள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே வரதட்சனை கொடுமை சட்டம் உள்ள நிலையிலும்,  இது தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கில், கடந்த  2017, உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், ,பிரிவு 498A இன் ‘தவறான பயன்பாடு’ தடுக்கும் பொருட்டு, ஒவ்வொரு நபரும் ஒரு ஆரம்ப விசாரணையின்றி கைது செய்ய முடியாது என்று கூறியிருந்த நிலையில், தற்போது உடனே கைது செய்யலாம் என்று அதிரடியாக கூறி உள்ளது.

வரதட்சணை கொடுமை குறித்து புகார் கொடுத்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கலாம், அவர்களை உடனடியாக கைது செய்யலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், வரதட்சணை கொடுமை குறித்து பெண்கள் யாரேனும் புகார் அளிக்கும் பட்சத்தில், சம்மந்தப்பட்டவர்களை எந்த விசாரணையும் இல்லாமல் கைது செய்யலாம் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மேலும்,  புகார் அளிக்கும் பெண்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அதே நேரத்தில் வழக்கில் சம்மந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றங்கள் முன்ஜாமீன் வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

வரதட்சணை கொடுமை:  சட்டம் என்ன சொல்கிறது? 

மூகத்தில் வேரூன்றியுள்ள வரதட்சணை பிரச்சினையை ஒழிக்கும் நோக்கத்தில் 1961ம் ஆண்டு வரதட்சணை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டது.

அதன்படி,  வரதட்சணை கேட்பது, வரதட்சணை எடுத்துக் கொள்வது மற்றும் வரதட்சணை கொடுப்பது அல்லது இரண்டும் தொடர்பாக கொடுக்கல் வாங்கல் விவகாரம் நடத்துவது வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும்.

ஒருவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாக வரதட்சணை கேட்பது உறுதி செய்யப்பட்டால், குறைந்தபட்சம் 6 மாதமும், அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைவாசம் கிடைக்கும்.

வரதட்சணை கொடுப்பது அல்லது கேட்பது உறுதி செய்யப்பட்டால், அத்தகைய நபருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த குற்றத்திற்கு குறைந்தபட்சம் 6 மாதம், அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வரதட்சணை வாங்கினால் 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும் வரதட்சணையாக கேட்கும் பணம் அல்லது பொருளின் மதிப்பு ரூ.15 ஆயிரத்திற்கும் அதிகம் இருக்கும் பட்சத்தில் தண்டனை மற்றும் அபராதமும் கூடுதலாகும்.

மேலும் வரதட்சணை கொடுப்பது தொடர்பாக மணமக்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதும் சட்டப்படி குற்றமாகும்.

இது தொடர்பாக இடைதரகர்களாக பேசுவோரும் தண்டனைக்கு உள்ளாவார்கள். அவர்களுக்கும் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

ஒரு வேளை வரதட்சணை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் பதிவாகி விசாரணை சமயத்தில் மணமகனின் பெற்றோர் கட்டாயப்படுத்தி வரதட்சணை வாங்கியது உறுதி செய்யப்பட்டால், வரதட்சணை கொடுத்த புகாரில் இருந்து மணமகளின் பெற்றோர் குற்றமற்றவராக விடுதலை செய்யப்படுவார்கள்.

மேலும் வரதட்சணை கொடுப்பது அல்லது வாங்குவது தொடர்பாக இரு குடும்பங்கள் இடையில் ஒப்பந்தம் செய்துக் கொண்டாலும் சட்டப்படி குற்றமாகும்.