டெல்லி:

கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து விளக்கம் அளிக்க  மத்தியஅரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் டெல்லி மாநில அரசுக்கும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாகி வருகிறது. உலக அளவில் பாதிப்பு 4வது இடத்துக்கு வந்துள்ளது. குறிப்பாக  மகாராஷ்டிரம், தமிழகம், மேற்கு வங்கம், குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் நாளுக்கு நாள் தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது.

இதுதொடர்பாக  கவனத்தில் எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், கொரோனா தொற்றுப் பரவல் குறித்து தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றுள்ளது.  இன்று வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள  மகாராஷ்டிரம், தமிழகம், மேற்கு வங்கம் போன்ற  மாநிலங்களில் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், அதுகுறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டு உள்ளது.

விசாரணையின்போது,  நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பாதித்து மரணம் அடைவோரின் உடல்களை மிக மோசமாக நடத்தும் சம்பவங்கள் நடந்தேறி உள்ளது.

புதுச்சேரியில் கொரோனா பாதித்த நபரின் உடல் சவக்குழியில் தூக்கி வீசப்பட்டுள்ளது.  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை முறையாக அடக்கம் செய்யப்படுவதில்லை என்று குற்றம் சாட்டியது.

டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்த ஒருவரது உடல் குப்பைத்தொட்டியில் இருந்து மீட்பு என்ற செய்தி வேதனை அளிக்கிறது, இந்த சம்பவம் கொடூரமானது என்று கூறிய நீதிபதிகள், கொரோனா உயிரிழப்பு விவகாரத்தில் மத்திய சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களை டெல்லி பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டியது.

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,டெல்லியில் பரிசோதனை குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளித்திருப்பதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், சென்னை மற்றும் மும்பையில் கொரோனா பரிசோதனை அதிகரித்திருக்கும் போது டெல்லியில் கொரோனா பரிசோதனை குறைக்கப்பட்டிருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

டெல்லியில் தற்போதைய நிலைமை மோசமானதாகவும், அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவும் மாறியுள்ளது. கொரோனா நோயாளிகளையும், கொரோனா பாதித்து உயிரிழக்கும் நபர்களின் உடல்களை கையாள்வது குறித்தும் வகுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகள் குறித்து ஜூன் 17-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த மாநிலங்களில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

மருத்துவமனைகளில் நோயாளிகளை பராமரிக்கும் மேலாண்மை திட்டம், மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளை பராமரிக்கும் நடைமுறை குறித்து மாநில முதன்மைச் செயலாளர்கள் அறிக்கை அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.