துணை ஆளுநர் அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு: கிரண்பேடியின் அதிரடி நிற்குமா?

துணைநிலை ஆளுநரின் அதிகாரம் குறித்து முக்கிய தீர்ப்பை  உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. இத்தீர்ப்பு புதுவையிலும் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரி மாநிலம் மத்திய அரசின் நேரடி ஆளுமையின் கீழ்   வருகிறது. புதுச்சேரிக்கென தனி சட்டப்பேரவை இருந்தாலும், முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் துணை நிலை ஆளுநரின் மேற்பார்வையில்தான் செயல்பட வேண்டும்.

இந்த நிலையில்  அலுவலகத்துக்கு உரிய நேரத்தில் பணிக்கு வருமாறு மாநில அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நேரடியாக அறிவுறுத்தினார் துணைநிலை ஆளுநர்  கிரண் பேடி. மேலும்,  அதிகாரிகளுக்கென தனி வாட்ஸ் ஆப் குழுவை ஏற்படுத்தி பணி விவரங்களை பதிவு செய்ய உத்தரவிட்டார். அதிகாரி ஒருவர் அந்தக் குழுவில் தவறான தகவலைப் பதிவிட்டதால், தலைமைச் செயலாளருக்கு தெரிவிக்காமலேயே அவரை பணியிடை நீக்கம் செய்து கிரண் பேடி உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனாலும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் அதிரடி தொடர்ந்தது.

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல், அதிகாரிகளை வைத்து கூட்டங்கள் நடத்தினார் கிரண்பேடி.

இது குறித்து சட்டபேரவையில் உரிமை மீறல் பிரச்னை கொண்டு வரப்பட்டு, கிரண் பேடிக்கு ஆதரவாக செயல்பட்ட நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

மேலும், துணைநிலை ஆளுநரிடம் இருந்து வரும் எந்த உத்தரவையும், தனது அனுமதியின்றி செயல்படுத்தக்கூடாது என முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார்.

இதன்பிசறகு, ஆட்சியாளர்களை சமூக வலைதளங்களில் வெளிப்படையாக விமர்சிக்க ஆரம்பித்த கிரண் பேடி, நாராயணசாமிக்கு எதிராக 32 கேள்விகளை வாட்ஸ் ஆப் மூலம் வெளியிட்டார்.

பதிலுக்கு, அமைச்சரவையின் அனுமதி இல்லாமல் அதிகாரிகள் யாரும் கிரண் பேடியை சந்திக்ககூடாது என நாராயணசாமி தெரிவித்தார்.

இதற்கிடையே உள்துறை அமைச்சகம் மூலம் 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கு கிரண் பேடி தன்னிச்சையாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இது , புதுச்சேரி அரசியலில் மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

ஆனால் நியமன எம்.எல்.ஏக்கள் தொடர்பான கோப்புகள் முறையற்ற வகையில் உள்ளதாகக் கூறி புதுச்சேரி சபாநாயகர் அதனை துணைநிலை ஆளுநர் மாளிகைக்கே திருப்பி அனுப்பினார். நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமிநாராயணன் வழக்கும் தொடர்ந்தார்.

இப்படி துணைநிலை ஆளுநருக்கும் அமைச்சரவைக்கும் முட்டல் மோதல் தகித்துக்கொண்டிருக்கிறது.

இதே போல டில்லி யூனியன் பிரதேசத்திலும் நடந்தவருகிறது. அங்கு ஆளும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான  அமைச்சரவைக்கும் துணை நிலை ஆளுநருக்கும் முட்டல் மோதல்.

இது தொடர்பாக ஆம் ஆத்மி அரசு டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. “ஆட்சி நிர்வாக அதிகாரம், துணை நிலை ஆளுநருக்கு மட்டுமே உள்ளது’ என, டில்லி உயர்நீதிமன்றம், 2016ம் ஆண்டு ஆக., 4 அன்று தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து, டில்லி அரசு பல்வேறு வழக்குகளை, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தது. ‘சட்டம் மற்றும் அரசியல் அமைப்பு சட்டம் தொடர்பானகேள்விகள் எழுவதால், இந்த வழக்கை, அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும்’ என, டில்லி அரசு கோரி வந்தது. மேலும் இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தது.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தன. ‘ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு மாற்றுவது குறித்து, விரைவில் முடிவு எடுக்கப்படும்’ என, அமர்வு கூறியுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளார்கள்.

அதில், “கூட்டாட்சி தத்துவத்தை மதித்து ஆளுநரும் அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.   எல்லா விசயங்களிலும் அமைச்சரவை துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அவசியமில்லை.  ஆளுநருக்கு என்று தனி அதிகாரம் கிடையாது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு துணை ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும். அமைச்சரவையுடன் துணை நிலை ஆளுநர் இனக்கமாக செய்லபட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக, துணை நிலை ஆளுநர் என்பவர், தன்னிச்சையாக செயல்படக்கூடாது என்பதே தீர்ப்பாக இருக்கிறது. டில்லி யூனியன் பிரதேசம் குறித்த வழக்கில் இத்தீர்ப்பு அளிக்கப்பட்டாலும், புதுவைக்கும் பொருந்தும்.

ஆகவே இனியாவது கிரண்பேடி தனது அதிரடிகளை நிறுத்துவரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.