இந்தியாவிலேயே உயரமான 114அடி கட்சி கொடி கம்பம் அமைப்பு: ஸ்டாலின் கொடி ஏற்றினார்

சென்னை:

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள  114 அடி உயர கொடி கம்பத்தில்,  திமுக கட்சிக் கொடியினை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.

இந்தியாவிலேயே மிக  உயரமான அரசியல் கட்சியின்  கொடி கம்பம், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நட இருப்பதாக திமுக தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதைன்படி இன்று  114 அடி உயரமான கொடிக் கம்பம் அமைக்கப்பட்டு வந்தது. இன்று அந்த கம்பத்தில் திமுக கொடியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.

இதுகுறித்து  திமுக தலைமைக் கழகம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“திமுக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் புதியதாக நிர்மாணிக்கப்பட்ட தமிழகத்தில் எந்தக் கட்சி அலுவலகத்தில் இல்லாத வகையில் 114 அடி உயரமும், 760 மி.மீ. விட்டமும்,  12×12 அடி அளவில் இரண்டு அடுக்கு கான்கிரீட் மேட்கள் அடிப்பகுதியும், 2,430 கிலோ எடையும், கம்பத்தில், 30 அடி அகலமும், 20 அடி உயரமும் கொண்ட கழகக் கொடியினை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஏற்றி வைத்தார்.

இக்கொடிக்கம்பத்தில் பறக்கும் கொடி இரவிலும் தெரியும் வண்ணம் இரண்டு ஹைபீம் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, கொடிமரப் பீடத்தில் அலங்கார விளக்குகள் டைமர் ஆட்டோமேட்டிக் சிஸ்டத்துடன் எரிந்து அணையும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த  நிகழ்வின்போது திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.