சென்னை,

கிழ்ச்சியின் கொண்டாட்டமாக கிறிஸ்துமஸ் விளங்குகிறது. இந்த நன்னாளில் கிறிஸ்துவர்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வ வாழ்த்துகள். அன்பு, கருணை, சகோதரத்துவத்தின் சின்னமாக விளங்கியவர் இயேசு பிரான்.
இந்த நன்னாளில் அமைதி, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை உருவாகி சிறப்பான எதிர்காலம் அமைந்து மனிதநேயம் தழைத்திட வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அதில், இயேசு பிரான் அவதரித்த நன் நாளை கிறிஸ்துமஸ் திருநாளாக மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,  உலக உயிர்கள் அனைத்தையும் அன்பால் கவர்ந்த வரும், உலக மக்களுக்கு அன்பின் புனிதத்தை உணர்த்தியவருமான இயேசு பிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாளில், கிறிஸ்துவப் பெருமக்கள் தங்கள் வீடுகளில் வண்ண மின் விளக்குகளால் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்து, வீட்டு வாசலில் மின் நட்சத்திரங்களை கட்டி, அதிகாலையில் குளித்து, புதிய ஆடைகளை உடுத்திக் கொண்டு தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை வழிபட்டு, உற்றார் உறவினர்களுடன் அறுசுவை விருந்துண்டு, கோலாகலமாக கொண்டாடி மகிழ்வார்கள்.

கிறிஸ்துவ மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட புரட்சித் தலைவி அம்மா, இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவப் பெருமக்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு நிதியுதவி அளிக்கும் சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி சீரிய முறையில் செயல்படுத்தினார்கள். புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, தொடர்ந்து இத்திட்டத்தினை செவ்வனே செயல்படுத்தியுள்ள தன் விளைவாக, இதுவரை 2800 கிறிஸ்துவப் பெருமக்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்.

இயேசு பிரான் போதித்த தியாகம், மன்னிப்பு, அன்பு, சமாதானம், சேவை மனப்பான்மை ஆகியவற்றை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

துணைமுதல்வர் ஓபிஎஸ்

மக்கள் இதயங்களில் அன்பை விதைத்து, அகிலம் முழுவதும் அன்புப் பயிர் செழித்து வளர, தன்னையே இந்த உலகிற்கு அர்ப்பணித்த தேவகுமாரனாம் ஏசுபிரான் அவதரித்த திருநாளையே கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கொண்டாடி மகிழ்கிறோம். அன்பு ஒன்றையே அடித்தளமாக அமைத்து, தனது சகமனிதனை நேசிக்க வேண்டும் என்று போதித்து, இந்த உலகத்தில் அன்பையும், சகோதரத்துவத்தையும் பரவச் செய்து, வறுமையில் வாடுபவர்கள், ஏழை, எளியோர், நோயுற்றோர் நலம் பெற பரமபிதாவின் ஆசியுடன் அற்புதங்கள் நிகழ்த்தியவர் ஏசு பிரான். மன்னிக்கும் மனப்போக்கும், மனிதநேயமும் வளர்ந்தோங்கிட தன் வாழ்க்கையையே செய்தியாக தந்தவர் ஏசு பிரான்.

ஏசுநாதர் காட்டிய வழியில், மனமாச்சர்யங்களை விட்டொழித்து, சமாதானமும், சகோதரத்துவமும் எங்கும் பரவச் செய்திடுவோம். கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடும் அனைத்து கிறிஸ்தவ பெருமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.