தமிழக காங்கிரஸ் கட்சியில் விரைவில் அதிரடி மாற்றம்! காங்கிரஸ் மேலிடம் முடிவு

டெல்லி:

மிழக காங்கிரஸ் கட்சியில் விரைவில் அதிரடி மாற்றம் செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது  தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தலைவர், செயல்தலைவர் என பலர் உள்ள நிலையில், இதை மாற்றவும், மேலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி கட்சிக்கு புத்துணர்வு ஊட்டவும் அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதுபோல இன்னும் இரண்டு ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சிக்குள் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி, புது ரத்தம் பாய்ச்சவும் அகில இந்திய தலைமை  முடிவு செய்துள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த பிப்ரவரி மாதம் 2ந்தேதி நியமிக்கப்பட்டார். அவருடன்,  தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக எச்.வசந்தகுமார், கே.ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

தற்போதுள்ள பல தலைமைகளை மாற்றி அமைக்க கட்சி மேலிடம் முடிவு செய்து இருப்பதாகவும், விரைவில் ஒரு பெரிய மறுசீரமைப்பு நடைபெறும் என்றும் தலைநகர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன்  கலந்தாலோசித்து, கட்சியின் செயல்படாத தலைவர்கள்,  அலுவலக பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட காங்கிரஸ் குழுக்கள் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக வும், கடந்த சில மாதங்களாக கட்சியின் மறுசீரமைப்பு குறித்து தமிழகத்திற்கான அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்  பொறுப்பாளர் சஞ்சய் தத் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, கூட்டங்களை நடத்தி கருத்துக்களை சேகரித்து வருகிறார். அதுபோல, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் கருத்துக்களை சேகரித்து வருகிறார்.

இருவரும்  தனித்தனியாக கருத்துக்களைப் பெற்றுள்ளனர்.  அவர்களின் கருத்துக்களை பரசீலித்து, அதன் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள தமிழக  காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர்கள் சிலர் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள நிலையில், அவர்களை மாற்றுவது குறித்து காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என்றும், மாநில காங்கிரஸ் கட்சியில் உள்ள கமிட்டிகளும் கடந்த 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நிலையில், அதில் மாற்றத்தை கொண்டுவரவும் தலைமை செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வரும் 5ந்தேதி முதல் 15ந்தேதி வரை மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து  நாடு முழுவதும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில், அதன்பிறகு, தமிழக காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள  சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை வலுப்படுத்தவும், கட்சி ஒரு வலுவான செயல்திறனை ஏற்படுத்துவதை உறுதிசெய்யவும்  மாவட்டத் தலைவர்கள் மற்றும் அலுவலக பொறுப்பாளர்களை  மாற்றுவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.  இந்த நியமனங்களின் போது, கட்சி நிர்வாகிகளின் செயல்திறனை மதிப்பீடு செய்தே, அவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும் என்றும், ஒதுக்கீடு முறையோ, தலைவர்களின் ஆதரவாளர்களையோ, பரிந்துரையோ ஏற்கப்படாது என்றும் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு டெல்லியில்  நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மாற்றங்கள் குறித்து தலைமை முடிவு செய்யும் என்றும் கூறப்படுகிறது.