சிபிஎஸ்இ பள்ளிகளை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு: உயர்நீதி மன்றம்

சென்னை:

னியார் சிபிஎஸ்இ பள்ளிகளை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உத்தரவிட்ட  உயர்நீதி மன்றம், ஏற்கனவே  விதிக்கப்பட்ட இடைக்கால தடையையும்  நீக்கியது.

தமிழகத்தில் அனைத்து சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என்று கடந்த ஆண்டு  மார்ச் 2ந்தேதி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையில், அங்கீகார சான்றிதழ் பெறாத பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் என்றும், அங்கீகாரம் இன்றி இயங்கினால் நாள் ஒன்றுக்கு10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் சார்பாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி மகாதேவன், தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தார்.

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையினிபோது,  தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால்,  தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளை ஆய்வு செய்யமுடியவில்லை என்றும்  ஆவணங்களை கேட்டுப் பெற முடியவில்லை என தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், கட்டண நிர்ணயத்தில் தலையிடவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, உயர்நீதி மன்ற அமர்வு, நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த இடைக்காலத்தடையை நீக்குவதாகவும், சிபிஎஸ்இ பள்ளிகளை ஆய்வு செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என்றும் குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.