Random image

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது!: அமைச்சர் ஜெயக்குமார்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுவரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதையடுத்து, அவர்களை விடுவிடுக்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அதனை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. அதில், சட்டப்பிரிவு 435-ன் படி சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் மத்திய அரசின் ஒப்புதலுடனே ஏழுபேரை விடுவிக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது

 

இந்தநிலையில் மீண்டும் 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு, தமிழக அரசு பரிந்துரை கடிதம் அனுப்பியது. அதற்கு, 7 பேரையும் விடுவிக்க இயலாது எனக்கூறி தமிழக அரசின் கோரிக்கையை ஏப்ரல் 14-ஆம் தேதி மத்திய அரசு நிராகரித்தது.

அதனால், உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள மத்திய அரசின் மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைக்க பேரறிவாளன் தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதனை ஏற்று வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதனால், சட்டப்பிரிவு 161-ன்படி 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் பரிந்துரைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார்,  “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது” என்று தெரிவித்தார். மேலும், “உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழுவிவரம் கிடைத்த பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.